இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஒரு செயற்கைக் கோளைச் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் நிறுத்திய போது, பெங்களுருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ),
தங்களது தலையில் பூச்சூடி, அழகான சேலை அணிந்த பெண்கள் , தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படம் மிகப் பிரபலமானது.
அந்த புகைப்படம், இந்தியாவில், விண்வெளி ஆராய்ச்சித் துறையில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற வழமையான ஒரு கருத்துணர்வுக்கு சவால் விடுவதாக இருந்தது.
ஆனால், பின்னர், இஸ்ரோ(Isro) அந்தப் புகைப்படத்தில் காணப்பட்ட பெண்கள் இஸ்ரோ நிர்வாக பிரிவில் பணிபுரியும் பெண்கள் என்று தெரிவித்தது.
ஆனால் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் பலரும் பணிபுரிந்தனர் என்றும் அவர்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தனர் என்றும் தெளிவுபடுத்தியது.
பிபிசியின் செய்தியாளர் கீதா பாண்டே சமீபத்தில், பெங்களூருவிற்கு சென்று, இந்திய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய பெண் விஞ்ஞானிகளைச் சந்தித்தார்.
மங்கள்யானை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய பெருமை
வட இந்தியாவின் லக்னோ நகரத்தில் வளர்ந்த கரிதால் சிறுவயதில் ”வானத்தைப் பார்த்து சந்திரனின் அளவு பற்றி யோசிப்பேன், ஏன் அது வளர்கிறது மற்றும் தேய்கிறது என்று யோசிப்பேன். அதன் இருண்ட இடங்களின் பின்னால் என்ன இருக்கும் என்று நான் அறிய விரும்பினேன்” என்கிறார்.
அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்த மாணவியான கரிதால், இயல்பியல் மற்றும் கணிதத்தில் ஆர்வமுடன் இருந்தார். தினமும் நாசா (NASA) மற்றும் இஸ்ரோ(ISRO)வின் திட்டங்கள் பற்றிய செய்திகள் வந்துள்ளனவா என்று தேடிப் படிப்பதுடன்,
வெளியான செய்திகளைக் கத்தரித்து, சேகரிப்பது, விண்வெளி ஆராய்ச்சி குறித்த எல்லா சின்ன விவரங்களையும் விடாமல் படிப்பது என மிக ஆர்வத்தோடு இருந்தார்.
பட்ட மேற்படிப்பு முடிந்தவுடன், ”இஸ்ரோவில் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பித்தேன். இப்படித்தான் நான் விண்வெளி விஞ்ஞானி ஆனேன்,” என்றார் கரிதால்.
‘குடும்பத்தையும், வேலையையும் கவனிப்பது எளிதான ஒன்று இல்லை. வார விடுமுறை நாட்களிலும் வேலைசெய்வோம்
கரிதால், இஸ்ரோ விஞ்ஞானி
தற்போது 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. கரிதால் இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அதில் , செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய, பிரசித்தி பெற்ற மங்கள்யான் திட்டமும் அடங்கும். இந்த திட்டம் கரிதால் மற்றும் அவரது சக பணியாளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.
மங்கள்யான் திட்டம் ஏப்ரல் 2012ல் தொடங்கியது. அறிவிப்பிற்கு பிறகு செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்ப வெறும் 18 மாதங்கள் தான் விஞ்ஞானிகளுக்கு இருந்தது.
“இந்தத் திட்டத்தை செயல்படுத்த மிகக் குறைந்த காலம் தான் இருந்தது. அது பெரிய சவாலாக இருந்தது.
மற்ற கிரகங்களுக்கு கலன்களை அனுப்பிய அனுபவம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு இருந்த குறைந்த காலத்தில் நாங்கள் நிறைய வேலைகளை செய்ய வேண்டியிருந்தது“ என்றார் அவர்.
இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து பெண் விஞ்ஞானிகளான நாங்கள் இருந்த போதும், இந்த வெற்றிக்கு அனைவரின் கூட்டு முயற்சி தான் காரணம் என்கிறார் கரிதால்.
நாங்கள் பொறியாளர்கள் மற்றும் அனைத்து குழு உறுப்பினர்களும் கலந்து பேசுவோம். கால நேரம் இல்லாமல் இந்த திட்டம் குறித்து ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்போம். பெரும்பாலான வார விடுமுறை நாட்களிலும் நாங்கள் வேலைசெய்வோம், ” என்கிறார் கரிதால்.
”குடும்பத்தையும், வேலையையும் கவனிப்பது எளிதான ஒன்று இல்லை. ஆனால் எனக்கு என் குடும்பம், எனது கணவர் மற்றும் என் உடன் பிறந்தவர்கள் ஆகியோரின் ஆதரவு எனக்கு கிடைத்தது,” என்கிறார் இரண்டு குழந்தைகளுக்கு தாயான கரிதால்.
செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்த பெண்கள்
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது, எனது மகனுக்கு 11வயது, எனது மகளுக்கு ஐந்து வயது. பல வேலைகளை ஒரே நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டியிருந்தது.
எங்களது நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டியிருந்தது. எனது வேலையில் களைப்பாகி வீடு திரும்பிய போதெல்லாம் எனது வீட்டில் குழந்தைகளுடன், அவர்களுக்கான நேரத்தை தந்து, மகிழ்ச்சியோடு இருந்தேன்.
அந்த நேரத்தில் நான் நிம்மதியாக இருப்பதாக உணர்ந்தேன். அதை நான் விரும்பினேன்,” என்றர் கரிதால்.
” Men are from Mars, Women are from Venus ” என்ற புத்தகத்தின் தலைப்பை வைத்து, ஆண்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தும், பெண்கள் வெள்ளி கிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் பொதுவாக சொல்லப்படுவது உண்டு.
ஆனால் இந்த செவ்வாய்க் கிரக திட்டத்தின் வெற்றியை அடுத்து, இந்திய பெண் விஞ்ஞானிகளை “செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்த பெண்கள்“ என்று பலர் வர்ணித்தனர். ஆனால், நான் பூமியைச் சேர்ந்த பெண். மற்றும் ஒரு அற்புதமான வாய்ப்பை பெற்றுள்ள ஒரு இந்திய பெண்மணி,” என்கிறார் கரிதால்.
மங்கள்யான் திட்டத்திற்கு பிறகு வெளிநாடுகள் இந்திய அறிவியல் திட்டங்களில் இணைய விரும்புகின்றன
கரிதால், இஸ்ரோ விஞ்ஞானி
”செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய திட்டம் பெரிய சாதனை தான். ஆனால் நாங்கள் இன்னும் பலவற்றை செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்த நாடு எங்களிடம் நிறைய திட்டங்களை எதிர்பார்க்கிறது.
அதன் மூலம் இந்த நாட்டின் கடைகோடியில் உள்ள நபருக்கு பலன் அளிக்கும் என்பதால் எங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த விஷயத்தில் பெண் விஞ்ஞானிகளை விட வேறு யார் இதைச் செய்ய முடியும்?,” என்ற கேள்வியை முன் வைக்கிறார் கரிதால்.
உலகின் கவனத்திற்கு வந்த மங்கள்யான்
தொலைக்காட்சியில் `ஸ்டார் ட்ரெக்` (Star Trek ) என்ற நிகழ்ச்சியைப் பார்த்தது தான் நந்தினி ஹரிநாத்தின் முதல் அறிவியல் அனுபவம்.
”எனது அம்மா கணித ஆசிரியர். எனது அப்பா ஒரு பொறியாளர். அவருக்கு இயற்பியலில் ஆர்வம் அதிகம். எங்களது குடும்பத்தில் நாங்கள் அனைவரும் `ஸ்டார் ட்ரெக்`நிகழ்ச்சி மற்றும் அறிவியல் கவிதைகள் தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளையும் விரும்பிப் பார்ப்போம்.”
அதே சமயம், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்று தான் யோசித்தது இல்லை என்கிறார் ஹரிநாத். ”அது இயல்பாக நடந்தது,” என்கிறார் நந்தினி ஹரிநாத்.
”இது தான் நாம் முதலில் முறையாக விண்ணப்பித்த வேலை. எனக்கு வேலை கிடைத்தது. தற்போது 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஆனால் அதற்கு பிறகு அது குறித்து நான் மறு யோசனை எதையும் செய்யவில்லை,” என்றார்.
செவ்வாய்க் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய திட்டத்தில் வேலை செய்தது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனை காலம்.
இந்தத் திட்டம் இஸ்ரோவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு முக்கியமான திட்டம். இந்தத் திட்டம் நம்மை ஒரு உயர்வான தளத்தில் கொண்டுவைத்தது.
பல வெளி நாடுகளும் நம்மோடு இணைய எதிர்பார்ப்புடன் உள்ளனர். எங்களுக்கு கிடைத்த முக்கியத்துவம் மற்றும் கவனம் நியாயமான ஒன்று தான்,” என்றார்.
”இஸ்ரோவிற்குள் என்ன நடக்கிறது என்பதை பார்க்க பொது மக்களை முதல் முறையாக இஸ்ரோ அனுமதித்தது. நாங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை எழுதினோம். எங்களுக்கு ஒரு பேஸ்புக் பக்கத்தை தொடங்கினோம். இதை உலகின் கவனத்திற்கு வந்தது,” என்றார்.
புதிய ரூ.2,000நோட்டில் மங்கள்யான் படம்
‘நான் செய்த சாதனையால் பெருமைப்படுகிறோம். சில சமயம், நான் மிக உயர்வாக எண்ணுகிறேன். ஆனால் சில சமயம் இந்தப் புகழ்ச்சியால் சற்று சங்கோஜமும் அடைகிறேன்.” என்கிறார் . ‘
ஆனால் தற்போது மற்றவர் எங்களைப் பார்க்கும் விதம் மிகவும் மாறியுள்ளது. பொது மக்கள் எங்களை விஞ்ஞானிகள் என்பதற்காக எங்களுக்கு ஒரு அங்கீகாரம் தருகிறார்கள். நான் அதை முழுமையாக அனுபவிக்கிறேன்,” என்கிறார் நந்தினி ஹரிநாத்.
மங்கள்யான் திட்டத்தில் வேலை செய்ததால் மிகப் பெருமைப்படுகிறேன். புதிய ரூ.2,000 நோட்டில் மங்கள்யானின் படத்தைப் பார்த்ததும் உண்மையில் சிலிர்ப்பாக இருந்தது.
ஆனால் நாங்கள் மங்கள்யான் திட்டத்தில் வேலை செய்தது எளிதான ஒன்று அல்ல. அந்த திட்ட்த்தின் போது , எங்கள் வேலை நாட்கள் நீண்டவையாக இருந்தன,” என்றார்.
தொடக்கத்தில் விஞ்ஞானிகள் ஒரு நாளில் 10 மணி நேரம் வேலை செய்தனர். ஆனால் மங்கள்யான் செலுத்தப்படும் நாள் நெருங்கியதும், வேலை நேரம் 12 முதல் 14 மணி நேரம் ஆனது,” என்கிறார்.
”மங்கள்யான் விண்ணில் செலுத்தப்படும் வேளையில், நாங்கள் யாரும் வீட்டிற்குச் செல்லவில்லை. காலையில் அலுவலகத்திற்கு வருவோம்.
அந்த முழு நாளையும் இரவையும் இங்கு கழிப்போம்.அடுத்த நாள் மதியம், உண்பதற்கும், சில மணி நேரம் உறங்குவதற்கும் வீட்டிற்குச் செல்வோம்.
இது போன்ற காலக்கெடு கொண்ட முக்கியமான திட்டத்திற்கு வேலை செய்யும் போது இவ்வாறு தான் வேலை செய்ய வேண்டியிருக்கும்,” என்கிறார்.
“நாங்கள் பல நாட்கள் தூக்கமில்லாத இரவுகளை கழித்தோம். இந்தத் திட்டத்தில் முன்னேறும் வேளையில், மங்கள்யானின் வடிவமைப்பு மற்றும் இந்தத் திட்டம் குறித்த பல பிரச்சனைகளை எதி ர்கொண்டோம். ஆனால் விரைவில் அதற்கான தீர்வுகளை புதுமையான வழிகள் மூலம் கண்டோம்,” என்றார்.
“விஞ்ஞானிகள் ஆராய்வதற்காக இந்த முழு அண்டமும் காத்துக்கொண்டிருக்கிறது
நந்தினி ஹரிநாத், இஸ்ரோ விஞ்ஞானி”
இதற்கு மத்தியில், ஹரிநந்தின் மகளின் பள்ளி பரீட்சை முடிவடைந்து விடுப்பு தொடங்கியது. அதை அவர் சிரமமாக உணர்ந்தார். ‘
‘அந்த சில மாதங்கள் மட்டும் நாங்கள் வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்று கோரிக்கை வைத்தோம். அந்தச் சமயம் வேலை என்பது ஒரு போட்டி போல இருந்தது.
எனது மகள் பரிட்சைக்கு படிக்க நான்கு மணிக்கு எழும் போது நானும் அவளோடு எழுந்து விடுவேன்.
தற்போது அந்த நேரத்தை மகிழ்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறோம். எனது மகள் மிகச் சிறப்பான வகையில் மதிப் பெண்களைப் பெற்றாள்.
கணிதத்தில் 100க்கு 100 எடுத்தாள். தற்போது என் மகள் மருத்துவம் படிக்கிறாள். அன்று எடுத்த முயற்சியின் உண்மையான பலன் இது தான் என்று நான் எண்ணுகிறேன்,” என்றார்.
”செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பியது பெரிய சாதனை தான். ஆனால் தற்போது அது முடிந்து விட்டது. நாங்கள் எதிர் காலத்தைப் பற்றி சிந்திக் கின்றோம்.
இன்னும் என்ன எங்களால் செய்ய வேண்டியுள்ளது என்று யோசிக்கின்றோம். நாம் ஆராய் வதற்காக இந்த முழு அண்டமும் காத்துக்கொண்டிருக்கிறது. பல கோள்கள் உள்ளன. அதனால் நாம் அதை ஆராய செல்ல வேண்டிய நேரம் இது,” என்கிறார்.
நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மங்கள்யான் வரை
இஸ்ரோவின் மூத்த பெண் அதிகாரியான அனுராதாவிற்கு வானம் தான் எல்லை.
பூமியின் மையத்தில் இருந்து, குறைந்தது 36,000 கிலோமீட்டர் தொலைவில் , விண்வெளியில் நிறுத்தப்படும் செயற்கைக் கோளை அனுப்புவதில் நிபுணத்துவம் பெற்றவர்.
இஸ்ரோவில் கடந்த 34 ஆண்டுகளாகப் பணிபுரியும் அனுராதா, விண்வெளி தொடர்பாக சிந்திக்கத் தொடங்கியபோது அவருக்கு ஒன்பதே வயதுதான்.
”நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால்பதித்த, அப்போலோ விண்வெளி பயண திட்டம் அப்போது நிறைவேறியது. அப்போது தொலைக்காட்சி எங்களிடம் இல்லை. அதனால் நான் எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.
அது என் கற்பனை வளத்தை அதிகப்படுத்தியது. எனது தாய்மொழியான கன்னடத்தில் நிலவில் மனிதன் கால் பதித்தது பற்றி ஒரு கவிதை எழுதினேன்,” என்றார் அனுராதா.
இஸ்ரோவில் உள்ள பெண் விஞ்ஞானிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அனுராதா பெண்களுக்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மறுக்கிறார்.
”மற்ற பாடத்திட்டங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் மற்ற பாடங்களில் பலவற்றை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அறிவியல் படத்தைப் பொறுத்த வரை, அது மிகவும் இயல்பான ஒரு பாடம் என்று உணர்ந்தேன்.
இந்தியச் சிறுமிகள் அறிவியல் தங்களுக்கான பாடம் என்று எண்ணுவ தில்லை என்ற கருத்தை நான் நம்பவில்லை. அவர்களுக்கு கணிதம் மிகவும் பிடித்தமான பாடம் என்று நினைக்கிறேன்.
பல பெண்கள் முக்கியமாக தாங்கள் செய்ய வேண்டியவை தங்களது வீட்டு வேலைகள் என்று எண்ணு கிறார்கள் அனுராதா, இஸ்ரோவில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானி
பாலினம் ஒரு பொருட்டல்ல
1982ல் இஸ்ரோவில் அனுராதா சேர்ந்தபோது, வெகு சில பெண்கள்தான் இஸ்ரோவில் இருந்தனர். அதோடு மிகவும் குறைவான அளவில் தான் பொறியியல் துறையில் இருந்தனர்.
”என்னோடு பொறியியல் பயின்ற ஐந்து, ஆறு பெண் பெண்கள் பொறியியலாளர்கள் இஸ்ரோவில் சேர்ந்தனர். நாங்கள் தனித்து காணப்பட்டோம்.
தற்போது இஸ்ரோவில் மொத்தம் உள்ள 16,000 ஊழியர்களில், 20 முதல் 25 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் உள்ளனர். தற்போது நாங்கள் தனித்து தெரிவதில்லை,” என்கிறார் புன்னகையுடன்.
மேலும் இஸ்ரோவை பொறுத்தவரை, பாலினம் ஒரு பொருட்டல்ல. பணியிடம் நிரப்புவது மற்றும் வேலையில் தகுதி உயர்வு பெறுவது போன்றவை ”ஒரு அறிவியல் திட்டம் குறித்து எங்களுக்கு என்ன மற்றும் எங்களால் என்ன விதத்தில் பங்களிக்க முடியும்” என்பதை பொறுத்தது என்கிறார் அனுராதா.
”சில சமயம் நான் ஒரு பெண் என்பதை இங்கு மறந்துவிட்டதாக நான் கூறுவேன். இங்கு பெண் என்பதால் சிறப்பான வகையில் நான் நடத்தப்படுவதில்லை மற்றும் ஒரு பெண் என்பதால் எனக்கு பாரபட்சம் காட்டப்படுவதும் இல்லை. மற்றவர்களோடு சமமாக தான் நடத்தப்படுகின்றேன்,” என்றார்.
தன்னோடு பணிபுரியும் பெண்கள் தன்னை ஒரு எடுத்துக்காட்டாக எண்ணுகிறார்கள் என்று குறிப்பிட்டபோது, அவர் சிரித்தார். ஆனால் மற்ற பெண்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வேலை செய்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களை ஊக்குவிக்கும் என்கிறார்.
”விண்வெளி ஆராய்ச்சியில் பெண்கள் பணிபுரிகிறார்கள் என்பதை அறிந்தால், பல பெண் குழந்தைகள் உத்வேகம் அடைவார்கள். தங்களாலும் முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவார்கள்,” என்றார்.
கலாசார மூட்டைகளை கீழே போடுங்கள்
இஸ்ரோவில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இன்னும் பாதி அளவை விட குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது.
ஏனெனில், ”நாம் இன்னும் கலாசார மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்லாமல் பல பெண்கள் முக்கியமாக தாங்கள் செய்ய வேண்டியவை தங்களது வீட்டுவேலைகள் என்று எண்ணுகிறார்கள்,” என்றார்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு அவரது அறிவுரை மிக எளியது: வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது தான்.
”நான் மிகவும் பயனுள்ள மற்றும் எனக்கு மிகவும் பிடித்த வேலையை செய்யப்போகிறேன் என்று ஒரு சமயம் தீர்மானம் செய்தேன். எனது வீட்டில் அதற்கு ஏற்றபடி சில மாற்றங்களை செய்தேன்.
எனது கணவர் மற்றும் எனது நான் மாமனார், மாமியர் எனக்கு ஒத்துழைத்தனர். அதனால் நான் எனது குழந்தைகளை பற்றி கவலை பட தேவை யில்லை,” என்றார்.
எனது வெற்றிக்கு நான் செய்த முன்னேற் பாடுகள் தான் காரணம். நீங்கள் ஒரு விஷயத்தை பெற வேண்டும் என்றால் ஒரு விஷயத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது தான்வாழ்க்கை .
அதனால் எனது அலுவல கத்தில் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் நான் அங்கு மிகுந்த ஈடுபாட்டுடன் வேலையில் இருப்பேன். அதே சமயம் நான் வீட்டில் இருக்க வேண்டிய முக்கிய சந்தர்ப்பங் களில் நான் வீட்டில் இருப்பேன்,” என்றார் அனுராதா.