அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப் பட்டிருக்கும் நிலையில், தேர்தலைச் சந்திக்கும் போது தான் அந்தக் கட்சி பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்று அரசியல் விமர்சகர் ஞாநி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தகுதி யானவரா என்பதை அந்தக் கட்சியினர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
அதிமுகவைப் பொருத்தவரை, ஜெயலலிதாவைத் தவிர அந்தக் கட்சிக்கு தலைவர் என்று வேறு யாரும் கிடையாது.
அந்தச் சூழ்நிலையில், தேர்தலைச் சந்திக்கும் போது, ஜெயலலிதாவைப் போல மக்கள் செல்வாக்குள்ள, மக்களுக்குத் தெரிந்த முகம் இல்லை என்பது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும்.
தேர்தலை சந்திக்கும் வரை பிரச்சனை இருக்காது, என்றார் ஞாநி. ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே, சசிகலா தான் நடைமுறையில் கட்சியையும் ஆட்சியையும் நடத்திக் கொண்டிருந்தார் என்று பல்வேறு பத்திரிகைச் செய்திகள் வந்திருக்கின்றன.
ஏற்கெனவே, திரைக்குப் பின்னால் இருந்து கட்சியையும் ஆட்சியையும் இயக்கிய வருக்கு தொடர்ந்து அதை பகிரங்கமாக செய்வதில் பெரிய சிக்கல் இருக்க முடியாது, என்று அவருக்கு உள்ள திறமை குறித்து கருத்துத் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஆவாரா?
சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஞாநி, பொதுச் செயலாளர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கும் போது, அடுத்த முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று தானே அர்த்தம், என்றார்.
பொதுமக்கள் மீது என்ன விதமான தாக்கம் ஏற்படும் என்பது குறித்துக் கருத்து வெளியிட்ட ஞாநி, "பொது மக்களைப் பொருத்த வரை, அதிமுக ஆட்சி நடந்து வந்த விதம் அவர்களுக்குத் தெரியும்.
ஜெயலலிதா இருந்த போது, எப்படி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருந்தார்,
கட்சியும் ஆட்சியும் எப்படி செயல்பட்டுக் கொண் டிருந்தது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டி ருந்தார்கள். அதிலிருந்து வேறுபட்டதாக ஒன்று இருந்து விடக்கூடிய வாய்ப்பில்லை, என்று தெரிவித்தார்.
பாஜகவுக்கு என்ன பலன்?
இந்த சூழ்நிலையை, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி எப்படிப் பயன்படுத்திக் கொள்ளும் என்று கருத்துத் தெரிவித்த ஞாநி, 2019-ல் மக்களவைத் தேர்தல் வருகிறது.
அப்போது அவர்களுக்குக் கூடுதலான எம்.பி.க்கள் தேவை. அதற்கு அவர்கள் கூட்டணிக்கு அதிமுகவை விரும்பலாம். எனவே, அதற்கேற்ப, அதிமுகவை நோக்கி அவர்கள் காய் நகர்த்தலாம் என எதிர் பார்க்கலாம், என்றார் ஞாநி.