சமூக மாற்றத்துக்கு எழுதும் எழுத்தாளனுக்கு எழுத இயலாமல் போவதைப் போன்று கொடுமையான விஷயம் வேறெதுவும் இல்லை. தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் எம்.வி.வெங்கட்ராம் குறிப்பிடத்தக்கவர்.
தினமும் குறைந்தது 30 பக்கங்கள் எழுதிக் குவித்தவர். அவர் இறுதிக் காலத்தில் கையெழுத்து கூட போட முடியாமல் அவதிப்பட்டது சோக வரலாறு. காரணம், ரைட்டர்ஸ் கிராம்ப்!
அதிகமாக எழுதி குவிப்பவர்களுக்கு இருவித பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. ஒன்று ரைட்டர்ஸ் ப்ளாக். புதிதாக சிந்தனைகள் எதுவும் தோன்றாது.
எழுத அமர்ந்தால் ‘எதை எழுதுவது’ என்று குழப்பம் மட்டுமே நீடிக்கும். மற்றது ரைட்டர்ஸ் கிராம்ப். எழுத வேண்டிய விரல்கள் சரியாக ஒத்துழைக்காது.
எழுத எழுத எழுத்து சிறிதாகிக் கொண்டே போய், வெறும் கோடுகளாக நீளும். இந்தப் பிரச்னை வருவதற்கான காரணங்கள், சிகிச்சைகள் பற்றி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராம்நாராயணிடம் பேசினோம்...
டிஸ்டோனியா என்பது நரம்பியல் இயக்க பிரச்னை. உடலில் பல பாகங்களில் வரக்கூடும். டிஸ்டோனியாவில் கை, கால் உதறல் அதிகமாக இருக்கும்.
சிலருக்கு உடல் முழுவதுமே நடுக்கம் ஏற்படலாம். கைவிரல்களில் அதிக நடுக்கம் உள்ளவர்களுக்கு எழுத இயலாது. இந்த வகை டிஸ்டோனியாவுக்கு ரைட்டர்ஸ் கிராம்ப் என்று பெயர்.
எழுத முயன்றாலும் கோர்வையாக எழுத வராது. எழுத்துகள் சிறிதாகிக் கொண்டே போகும். கோடுகள் மாதிரி சிலர் எழுத ஆரம்பிப்பார்கள்.
எழுத்துகள் புரியாது. எழுதுவதற்கு உதவும் முன்கை, கை, விரல்கள் மூன்றிலும் உள்ள தசைகளில் டிஸ்டோனியா ஏற்படுவதால் தசைகளில் இறுக்கம் ஏற்படும். இதனால் எழுதுவது கடினமாக இருக்கும். வலியும் இருக்கும்.
ரைட்டர்ஸ் கிராம்ப் எதனால் வருகிறது என்பதற்கு அறிவியல் ரீதியிலான ஆதாரம் இதுவரை கண்டறியப்பட வில்லை.
அதிகம் எழுதுபவர்களுக்கும், இசைக்கருவிகள் அதிகமாக வாசிப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பது நிரூபணமாகி உள்ளது. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் பெரும்பாலும் சிகிச்சைக்கு வருவதில்லை.
30 வயதில் இருந்து 50 வயதுக்குள் உள்ளவர்களுக்கே ரைட்டர்ஸ் கிராம்ப் ஏற்பட அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. பெண்களை விட ஆண்களைத் தான் அதிகம் தாக்குகிறது.
இப்போது பேனா வில் எழுதுபவர்களை விட கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ளீடு செய்பவர்களே அதிகம்.
அதனால் ரைட்டர்ஸ் கிராம்ப் வருவது பெருமளவு குறைந்துள்ளது. ரைட்டர்ஸ் கிராம்ப் வந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சையை மட்டும் கொடுத்து சரிசெய்து விட முடியாது.
கைகளில் தேவையற்ற நடுக்கம் இருந்தால் அதை நிறுத்துவதற்கான சிகிச்சையை அளிக்க வேண்டும்.
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் இதற்கான சிகிச்சையை அளிப்பார். எழுத வேண்டிய விரல்களை ஊக்கப்படுத்தும் பயிற்சிகளை கொடுப்பார்கள்.
நரம்பியல் நிபுணரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் எடுத்தால் தான் சிலருக்கு சரியாகும். சிலருக்கு ஆன்டிகோலினர்ஜிக் மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் பிரச்னை கட்டுக்குள் இருப் பதும் கண்டறியப் பட்டுள்ளது.
போட்டுலினம் நியூரோடாக்சின் ஊசியை பலவீனமடைந்த தசைகளில் செலுத்து வதன் மூலமும் பலனைப் பெறலாம்.
மூளையில் உள்ள தலாமஸ் பகுதியை இரண்டு எலெக்ட்ரோடுகளை வைத்து தூண்டி விடுவதாலும் ரைட்டர்ஸ் கிராம்ப் சரியாகும். இந்த சிகிச்சை முறைக்கு ‘டீப் பிரைன் ஸ்டிமுலேஷன்’ என்று பெயர்.
ரைட்டர்ஸ் கிராம்ப் ஒரு முறை வந்து சரியானால், மறுபடியும் வராது என்றும் நிச்சயமாக சொல்ல முடியாது. ஒரு கையில் வந்து பிரச்னை தீவிரம் அடைந்தால்
இன்னொரு கையிலும் வரலாம்... அதிகம் எழுதுபவர்களுக்கும், இசைக் கருவிகள் அதிகமாக வாசிப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பது நிரூபணமாகி உள்ளது.