தமிழ்நாட்டில் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் விற்பனை செய்யும் பாலின் சந்தை மதிப்பு ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய்.
இதை பூர்த்தி செய்வது, வெறும் மேய்ச்சல் நிலங்களையும், சோறுவடித்த கஞ்சியையும் நம்பி இருக்கும் நமது நாட்டு பசு மாடுகள்தான்.
இந்த மாடுகளுக்கென்று நாம் பெரிய அளவில் எந்த நிறுவனத்தின் தீவனத்தையோ, ஊட்டச் சத்தையோ நம்பி இருக்கவில்லை.
அதே போல், வெறும் புல்லையும், வைக்கோலையும், இலை மற்றும் தழைகளையும் உண்டு வாழும் நாட்டு மாடுகளில் இருந்து தான், உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் சுத்தமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கின்றன.
மேலும், கோயில் மாடு என்ற பெயரில் ஒவ்வொரு ஊரிலும் சில மாடுகள் இருக்கும். அந்த கோயில் மாடுகள் வருடம் முழுவதும், ஜாலியாக ஊரை சுற்றிக் கொண்டு இருக்கும்.
அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள நூற்றுக் கணக்கான மாடுகளின் இனவிருத்திக் காகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கும். இது தவிர, ஜல்லிக் கட்டுக்காக வளர்க்கப்படும் மாடுகளும் இனவிருத்திக்குப் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு தீவனம், ஊட்ட சத்து போன்ற எதற்கும் யாரையும் சாராமல், தமிழ் நாட்டில் ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவிலான பால் விற்பனை சந்தையை நாட்டு மாடுகளே தீர்மானிக்கின்றன.
இந்த நாட்டு மாடுகள் இருக்கும் வரை, பன்னாட்டு நிறுவனங்களால் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பால் விற்பனை சந்தையை கைப்பற்ற முடியாது. மேலும் தீவனம் மற்றும் ஊட்டச் சத்து மருந்துகளையும் சந்தை படுத்த முடியாது.
அதனால் நாட்டு மாடுகளை ஒழித்து, கலப்பின மாடுகளை தமிழ் நாட்டில் புகுத்தி விட்டால், அவற்றை பராமரிக்க சாதாரண மேய்ச்சல் நிலங்கள் போதாது. மேலும் அவற்றுக்கு தீவனம் மற்றும் ஊட்டச் சத்து மருந்துகள் மிகவும் அவசியம்.
அப்படி ஒரு சூழ் நிலையை தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்து விட்டால், பால் விற்பனை சந்தை மற்றும் தீவன சந்தை ஆகியவற்றை எளிதில் கைப்பற்றி விடலாம்.
அதன் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் கோடிகளை லாபம் பார்க்கலாம் என்பதே பன்னாட்டு நிறுவனங்களின் திட்டம். ஆனால் நாட்டு பசுக்கள் மற்றும் காளைகள் இருக்கும் வரை அந்த திட்டத்தை செயல் படுத்த முடியாது.
அதற்காக, நாட்டு மாடுகளை ஒழிக்கும் முதல் படியாக, ஜல்லிக்கட்டை ஒழிப்பதே பன்னாட்டு பாகாசூர நிறுவனங்களின் முதல் திட்டம்.
அதை நேரடியாக செய்ய முடியாது என்பதால், பீட்டா என்ற அமைப்பு மூலம் மெள்ள மெள்ள காய்கள் நகர்த்தப் படுகின்றன.
அது சரி, பீட்டா என்றால் என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல், அமெரிக்காவில் இயங்கி வருகிறது.
அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.
அதன் பின்னர், வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது.
ஒவ்வொரு நாளும் தெரு நாய்களைப் பற்றி ஆயிரக் கணக்கான தொலைபேசி அழைப்புகள் பீட்டாவிற்கு வரத் துவங்கின.
அதனால், லட்சக் கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப் படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா. அந்தச் சட்டத்தின் படி, பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும்.
அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன் வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு 2015 ம் ஆண்டில் மட்டும் நாய்கள், பூனைகள், முயல்கள் என 35 ஆயிரம் உயிரினங்களை கருணை கொலை செய்திருக்கிறது பீட்டா.
இந்த பீட்டதான், நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்! மாட்டின் கொம்பைப் பிடிக்கிறாய்! கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்! என்று கண்ணீர் வடிக்கிறது.
இவ்வாறு மாட்டை மிருக வதை செய்வதால், ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் கூக்குரலிடுகிறது. சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற வாசகம் பீட்டாவுக்கு மிகவும் பொருந்தும்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும், முயல்களையும் கொல்ல வேண்டும்? என கேள்வி எழலாம்.
அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது உண்மையான காரணம் அல்ல. அதற்குப் பின்னால் பல லட்சம் டாலர் மழையை அறுவடை செய்யும் ரகசியம் ஒளிந்து இருக்கிறது.
அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக் கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய சந்தை.
எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள், அந்த நிறுவனங்களின் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.
சரி. அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்றும் கேள்வி எழலாம்.
நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி, ஐந்தாம் படை வேலை செய்து, போலி வீடியோ மற்றும் புகைப்படங்களை தயாரிக்கும்.
பின்னர் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முடக்கிவிடும். இதுவும் பீட்டாவின் வெற்றி ரகசியங்களில் ஒன்றாகும்.
போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள் தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை.