நம்மை வியக்க வைக்கும் சீனப் பெருஞ்சுவர் !

சீனப் பெருஞ்சுவர் மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஐந்தாம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. தனது நாட்டின் பாதுகாப்புக்காக உலகில் எந்த நாடும் இவ்வளவு பிரமாண்டமான சுவரை இதுவரை கட்டியதே இல்லை. 

மலைகளுக்கிடையே மிகவும் உறுதியாகவும் நீளமாகவும் சற்றே அகலமாகவும் கட்டப்பட்ட இந்தப் பெருஞ்சுவர், நன்கு படித்து கட்டுமானக் கலை அறிந்த எஞ்சினியர்களால் கட்டப்பட்டது இல்லை என்பது விசித்திர உண்மை.

எங்கிருந்து பார்த்தாலும் இதன் நீண்ட அமைப்பு பார்ப்பவர்களின் கண்களுக்குத் தெரிவது போல் எழுப்பப்பட்டிருக்கும் இந்தப் பெருஞ்சுவரின் வரலாறு சுவாரஸ்யமானது.

சீனாவின் மலைகளுக்கு இடையே நீண்டதொரு ரிப்பனைப் பிடித்ததுபோல் கட்டப்பட்ட இந்தப் பெருஞ்சுவர் அந்நியப் படையெடுப்பை சீனாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என்கிற பாதுகாப்பு நோக்கத்தில் கட்டப்பட்டது.

ஆனால் இப்போது இது ஒரு அதிசயம். உலகின் தனித்துவமான ஒரு கட்டுமான அதிசயமாகக் கருதப்படுகிறது இது. வாழ்நாளில் ஒருமுறையாவது இதை நேரில் கண்டு தரிசிக்க வேண்டும் என 

உலகெங்கிலுமிருந்து பல சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். சீனாவுக்கு வரும் உலகத் தலைவர்களுக்கு சீனா மிகுந்த பெருமிதத்துடன் இதைச் சுற்றிக் காட்டுகிறது.

இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தச் சுவர் ஒரேயடியாக நீளமாகவே கட்டப்படவில்லை. துண்டு துண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பிறகு மெதுவாக ஒன்று சேர்க்கப்பட்டன. 

ஆனால் கட்டிட வேலை மட்டும் நிற்கவே இல்லை. இந்தப் பெருஞ்சுவரின் நீளம் 2,500 கி.மீ.யிலிருந்து 5000 கி.மீ வரை இருக்கும் என்கிறார்கள். ஆனால் தற்போது 21,190 கிலோமீட்டர் நீளம் உள்ளது என புதிய தகவல்கள் சொல்கின்றன. 

ஆனால் இதுவும் இன்னும் இறுதியானதாகக் குறிப்பிடப்படவில்லை. இன்றைய தலைமுறையினர் இந்தச் சுவரின் பெரும்பகுதி 1522லிருந்து 1620ம் வருடம் வரை கட்டப்பட்டது என்கிறார்கள். 

மிங் வம்சத்தினர் சீனப் பெருஞ்சுவர் கட்ட அதிக கவனம் செலுத்தினர். இப்பணி 1368 முதல் 1644 வரை மிக வேகமாக நடந்தது. அப்போது பதவியில் இருந்த மிங் வம்சம் இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

கிழக்கு சீனாவின் கடற்கரையில் இருக்கும் ஷாஸ்கால்குயான் என்னும் இடத்தில் இருந்து தக்லாம்கான் பாலைவன ஓரம் வரை இந்தச் சுவர் நீண்டு கிடக்கிறது. 

ஒரு சில இடங்களில் இச்சுவர்கள் ஒன்றின் மீது ஒன்றாகவும் பல இடங்களில் இடைவெளி விட்டும் கட்டப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் அந்தச் சுவரைக் கட்டும் போது ஏற்பட்ட சில குறைபாடுகள். 

பல இடங்களில் நீளமாகச் சென்றாலும் சில இடங்களில் துண்டு துண்டாகவும், அதாவது தொடர்பு இல்லாதது போலும் இச்சுவர் நீள்கிறது. பிற்காலத்தில் இவை சரிசெய்யப்பட்டன.

பல நூற்றாண்டுகளுக்கு முன் அப்போதைய வல்லுநர்களால் கட்டப்பட்ட இந்தப் பெருஞ்சுவரை, சீனாவில் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த பல்வேறு அரசாங்கங்கள் தங்கள் நாட்டின் வரலாற்றுக்குரிய அடையாளம் என்று 

பெருமையாகக் கருதி பாதுகாத்தன.இந்தச் சுவரின் உயரம் சுமார் 26 அடி. அகலம் 20 அடி. களிமண், சுண்ணாம்பு, செங்கல் போன்றவற்றை உபயோகப்படுத்திக் கட்டப்பட்டது இச்சுவர். 

மிகப் பழமையான இந்தச் சுவரை நவீன உத்தியுடன் புதுப்பிக்கவும் செய்தார்கள். நான்கு குதிரை வீரர்கள் ஒரே சமயத்தில் ஒன்றாக இந்தச் சுவரின் மீது சவாரி செய்ய முடியும்.

1549ம் வருடம் மங்கோலியர்கள், சீனாவின் தலைநகரை தாக்கப்போவதாகச் செய்தி வந்தது. பாதுகாப்புச் சுவர் இருக்கிறது, படை இருக்கிறது... எதிரிகளால் நம்மை என்ன செய்ய முடியும் என்று 

அப்போதைய சீனாவின் ஆட்சியாளர்கள் நினைத்து விட்டார்கள். ஆனால் மங்கோலிய மன்னன் அல்டான்கான், தனது 700 குதிரைப் படை வீரர்களுடன் சீனத் தலைநகரின் ஒரு பெரிய வாயில் வழியாக உள்ளே நுழைந்து விட்டான்.

இதைத் தொடர்ந்து இந்த சுவரில் இருந்த பலவீனமான பகுதிகளைச் சரிசெய்து பாதுகாப்பைப் பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டன. 

இதனால் சீன அரசாங்கத்தின் வருவாயில் 75 சதவீதம் இந்தச் சுவரின் பராமரிப்புக்காகவே செலவிடப்பட்டது.

ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த சீனாவின் பொருளாதாரம் இப்படிப்பட்ட செலவினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. விளைவு, மிங் வம்ச அரசாட்சி கவிழ்ந்தது.

இப்போதும் அச்சுவர் பல இடங்களில் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டாலும், காலங்களைக் கடந்து தாக்குப் பிடித்து நிற்கிறது. இப்போதைய சீன அரசுக்கு அப்போதைய அரசுகள் போல இந்த சுவரின் மீது அதிக காதல் இல்லை என்பது மட்டும் உண்மை.

ஆனால் இந்த சுவர் சீனாவின் பாதுகாப்பை தம்மால் முடிந்த மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டும் தனது நீண்ட வரலாற்றை சுமந்து கொண்டும் நிற்கிறது என்பது நிதர்சனம்.
Tags:
Privacy and cookie settings