”எனக்கு 23 வயதாகிறது. பொதுவாக, 28 – 35 நாட்களுக்கு ஒருமுறை என் மாதவிலக்கு சுழற்சி அமையும். கடந்த ஆறு மாதங்களாக 40 நாட்களுக்கு ஒருமுறை, சமயங்களில் 50 நாட்களையும் கடந்துவிடுகிறது.
வீட்டில் சொல்ல தயக்கமாக இருக்கிறது. எனக்கான தீர்வை அவள் விகடன் இதழில் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்…”
இளம் வாசகி ஒருவரின் கடிதத்துக்குப் பதில் அளிக்கிறார், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல், மகப்பேறு மருத்துவர் எஸ்.பாமா ”பொதுவாக மாதவிடாய் பிரச்னை பற்றிப் பேசுவதில் உள்ள தயக்கத்தை, அனைத்துப் பெண்களுமே தள்ளி வைக்க வேண்டும்.
சீரற்ற சுழற்சி, அதிக ரத்தப்போக்கு, அதிக நாட்களுக்கு ரத்தப்போக்கு, மாதவிலக்கு நாட்களில் இயல்புக்கு மீறிய வயிற்று வலி, மெனோபாஸ் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மருத்துவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள். இந்த வாசகியின் பிரச்னைக்கு வருவோம்.
பொதுவாக, 21 நாட்களில் இருந்து 35 நாட்களுக்குள் ஏற்படும் மாதவிலக்கு இயல்பானது. ஆனால், இன்றைக்கு அதிகமானோர் இது தள்ளிப் போகும் பிரச்னைக்கு ஆட்படுகிறார்கள். காரணம், உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறை மாற்றமும்தான்.
வயதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், பருமனா, ஒல்லியா என்று உங்கள் உடல்வாகு பற்றி குறிப்பிடவில்லை. நீங்கள் குண்டாக இருந்தால், தைராய்டு பிரச்னை காரணமாக, மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போயிருக்கலாம். உடனடியாக தைராய்டு பரிசோதனை அவசியம்.
நீங்கள் ஒல்லியாக இருந்தால், உங்கள் சினைப்பையில் உள்ள நீர்க்கட்டி காரணமாக இந்தப் பிரச்னை வரலாம். இதற்கான பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். இவை இரண்டும்தான் மாதவிலக்கு தள்ளிப்போவதற்கு பிரதான காரணங்கள்.
தைராய்டு பிரச்னையை மாத்திரை மருந்துகளாலும், சினைப்பையில் நீர்க்கட்டி என்றால் மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சியாலும் குணப்படுத்தலாம்.
எப்படி இருந்தாலும், உடனே மகளிர் நல மருத்துவரை அணுகுங் கள். இல்லையென்றால், இப்பிரச்னை தீவிர மடைந்து குழந்தைப் பிறப்பு வரை சிக்கலை ஏற்படுத்தலாம்.
எல்லாப் பெண்களுமே தினம் 45 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்வதும், பச்சைக் காய்கறிகளையும், கீரை, முளைகட்டிய பயிர்களை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதும், மா, பலா, வாழை தவிர்த்து தினம் ஒரு பழம் கட்டாயம் எடுத்துக்கொள்வதும் நல்லது.
இதையெல்லாம் பூப்பெய்திய நாள் தொடங்கி கடைப்பிடித்து வர, மாதவிலக்கு மட்டுமல்ல… பெண்களின் ஆரோக்கியமும் சீராக இருக்கும், ஆயுள் முழுக்க!