கும்பகோணம் அருகே பள்ளி மாணவன் கொலை வழக்கில் கிராம நிர்வாக அதிகாரியிடம் 2 பேர் சரண் அடைந்துள்ளனர். பெண்ணுடன் பழகியதால் இந்த மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கே.கே.நீலமேகம் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் நிஜாம் மைதீன்.
இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மெகராஜ்கனி. இவர்களது மகன் அப்துல்மர்ஜிக் (வயது16).
இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பளளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 28–ந் தேதி இரவு வீட்டிலிருந்த அப்துல் மர்ஜிக், டியூசனுக்கு சென்ற தம்பி அப்துல் சாபினை அழைத்து வருவ தற்காக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.
அப்போது அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. இதனால் அவர் தனது மோட்டார் சைக்கிளை வழியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் நிறுத்திவிட்டு சென்றார்.
இதன்பின் அப்துல்மர்ஜிக் வீடு திரும்ப வில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அப்துல்மர்ஜிக் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இந்த நிலையில் 29–ந் தேதி காலை கும்பகோணம் அருகே உள்ள வளையப் பேட்டை பழவத்தான் கட்டளை சுவாமிமலை பிரிவு வாய்க்கால் அருகே அப்துல் மர்ஜிக் வெட்டுக் காயங் களுடன் பிணமாக கிடந்தார்.
இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை யாளிகளை கைது செய்ய சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா, சப்–இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டன.
மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக தாராசுரம் குருநாதன் பிள்ளை காலனி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த ராஜா மகன் சண்முக சந்திரன் (23),
தாராசுரம் கவரத்தெருவை சேர்ந்த மற்றொரு ராஜா மகன் சின்ன அப்பு என்ற ராமமூர்த்தி (20) ஆகிய இருவரும் சுவாமிமலை கிராம நிர்வாக அதிகாரி ஜெயராஜிடம் நேற்று காலை சரண் அடைந்தனர்.
சரணடைந்த இருவரும் சுவாமிமலை போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.
போலீசார் சண்முகசந்திரன், சின்னஅப்பு என்ற ராமமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல தகவல்கள் வெளியானது.
சண்முக சந்திரன் திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்தி ருந்ததாக கூறப்படுகிறது. அதே பெண்ணுடன் அப்துல் மர்ஜிக்கும் பழகியதாக தெரிகிறது.
அப்துல் மர்ஜிக் அந்த பெண்ணுடன் பழக தொடங்கியதில் இருந்து அந்த பெண் சண்முக சந்திரனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் சண்முக சந்திரனும், சின்னஅப்பு என்ற ராம மூர்த்தியும் சேர்ந்து மாணவன் அப்துல் மர்ஜிக்கை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.