சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா சூரனகத்தே கிராமத்தை சேர்ந்தவர் ஹரடே ரவி (வயது 35). தொழிலாளி. இவருக்கும் அந்தப் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான ஹரடே ரவி, தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து பிரியதர்ஷினியிடம் நீ அழகாக இல்லை என்று கூறியும்,
உனக்கு சரியாக சமைக்க தெரிய வில்லை என்றும் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து, உதைத்து வந்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் வேலைக்கு சென்ற ஹரடே ரவி, மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது பிரியதர்ஷியினியிடம் சரியாக சமையல் செய்யவில்லை என்று தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
அப்போது ஆத்திரம் அடைந்த ஹரடே ரவி தலையணையால் பிரியதர்ஷியின் முகத்தில் அமுக்கினார்.
இதில் மூச்சுத் திணறி பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தார். இதையடுத்து ஹரடே ரவி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த சாகர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியதர்ஷினியின் உடலை மீட்டு ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த ஹரடே ரவியையும் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி நடந்தது.
இது தொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் தொடரப் பட்டது. இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி மகேஷ்வரி ஹிரேமட் தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட மனைவியை கொலை செய்த ஹரடே ரவிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து ஹரடே ரவியை போலீசார் சிறையில் அடைத்தனர்.