என்ஜினீயரை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய மனைவி !

ஆலந்தூர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் என்ஜினீயரான தனது கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். அவரது கள்ளக்காதலனும் கைதானார்.
என்ஜினீயரை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய மனைவி !
என்ஜினீயர் கொலை

சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 35). 

இவர், சென்னையில் உள்ள பிரபல சினிமா தியேட்டர் மாலில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுரேகா(26). இவர்களுக்கு சாதனா (4) என்ற மகள் உள்ளார். 

கடந்த 3-ந்தேதி நள்ளிரவில் வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் அறிவழகனும், சுரேகாவும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். 

அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், அறிவழகனின் கழுத்து அறுக்கப் பட்டதால் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயங்களுடன் சுரேகா மருத்்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். 

இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை துணை கமிஷனர் கல்யாண், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கோவிந்தராஜன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
கழுத்தை அறுத்தனர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேகாவிடம் தனிப்படை போலீசார் விசாரித்த போது அவர், 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து

அறிவழகனின் கழுத்தை கத்தியால் அறுத்ததாகவும், அதை தடுக்க முயன்ற தன்னையும் கட்டிப் போட்டு தாக்கி விட்டு நகையை பறித்துச் சென்றதாகவும் கூறினார்.

ஆனால் சுரேகா கூறியதில் போலீசாருக்கு பலத்த சந்தேகம் எழுந்தது. எனவே அவரிடம் மீண்டும் போலீசார் விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

குழந்தையிடம் விசாரணை

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் குழந்தை சாதனாவிடம் விசாரித்தனர். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் கணபதி என்பவர் அடிக்கடி தங்கள் வீட்டுக்கு வந்து செல்வதாக சாதனா கூறினாள். 

அதை கேட்டு போலீசார் உஷார் அடைந்தனர். இதற்கிடையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற கணபதியை (25) போலீசார் மடக்கி பிடித்தனர். 

அவர், இந்த கொலை பற்றி திடுக்கிடும் தகவல்களை கூறினார். போலீசாரிடம் கணபதி அளித்து உள்ள வாக்கு மூலம் வருமாறு:-
கள்ளக்காதல்

நானும், சுரேகாவும் எதிர் எதிரே உள்ள வீடுகளில் வசித்து வந்தோம். இதனால் சுரேகாவை அடிக்கடி பார்ப்பேன். இருவரும் பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கொண்டே இருப்போம்.

இதனால் சுரேகா மீது எனக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி அவரிடம் தெரிவித்தேன். நாளடையில் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. 

நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். எங்கள் கள்ளக்காதல் விவகாரம் பற்றி அறிந்த அறிவழகன் எங்களை கண்டித்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை அறிவழகன் பார்த்து விட்டார். மீண்டும் எங்களை கண்டித்தார். சுரேகாவை அறிவழகன் துன்புறுத்தி வந்தார்.

கொலை செய்ய திட்டம்
எனவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் அறிவழகனை கொலை செய்து விட்டு நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என முடிவு செய்தோம்.

அதன்படி கடந்த 3-ந்தேதி இரவு வீட்டில் அறிவழகன் அயர்ந்து தூங்கிய பிறகு சுரேகா எனக்கு தகவல் தெரிவித்தார். உடனே நான் அவரது வீட்டுக்கு சென்றேன். 

அவர் கதவை திறந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் நான், சுரேகாவும் சேர்ந்து அறி்வழகனின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்தோம்.

பின்னர் சந்தேகம் வராமல் இருக்க மர்ம நபர்கள், அறிவழகனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, சுரேகாவையும் தாக்கி கட்டிப் போட்டு விட்டு சென்று விட்டதாக போலீசாரை நம்ப வைக்க முடிவு செய்தோம்.

அதன்படி கத்தியால் அறிவழகனின் கழுத்தை அறுத்தோம். பின்னர் சுரேகாவின் கை மற்றும் கால்களில் வெட்டு காயங்களை ஏற்படுத்தி விட்டு, 

அவரை கட்டிப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒப்புக்கொண்டார்

பின்னர் மருத்துவ மனையில் உள்ள சுரேகாவிடம் போலீசார் விசாரித்த போது அவர், கணவரை கொலை செய்து விட்டு நாடகம் ஆடியதை ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் சுரேகா கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக அறிவழகனும் நானும் சந்தோஷமாக இல்லை. எதிர் வீட்டில் வசிக்கும் மெக்கானிக் கணபதியுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகு நான் சந்தோஷமாக இருந்தேன்.

இதனால் அறிவழகன் என்னிடம் சந்தேகப்பட்டு சண்டை போடுவார். எனவே அறிவழகனுடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை. இது பற்றி கணபதியிடம் கூறினேன். 

அவர், அறிவழகனை கொலை செய்து விட்டு நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்றார். இதையடுத்து அறிவழகனை எப்படி கொலை செய்வது? என குழப்பமாக இருந்தது.

வாலிபர்கள் மீது பழி

இந்த நேரத்தில் தான் எங்கள் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாலிபர்கள் சிலர் மது அருந்தியதை அறிவழகன் கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது நினைவுக்கு வந்தது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணவரை கொலை செய்து விட்டு அந்த வாலிபர்கள் மீது பழிபோட திட்ட மிட்டேன்.

அதன்படி கடந்த 3-ந்தேதி இரவு 11.30 மணிக்கு கணபதியை வீட்டுக்கு வர வழைத்தேன். நானே கதவை திறந்து உள்ளே அழைத்து சென்றேன்.

அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அறிவழகனை தலையணையால் அமுக்கினோம். அவர் திமிறியதால் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தோம்.

பின்னர் வீட்டில் இருந்து அறிவழகன் உடலை வெளியே தூக்கி வந்து போட்டோம். புத்தாண்டு தினத்தில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில்

அந்த வாலிபர்கள் கொலை செய்து விட்டது போல் போலீசாரை நம்ப வைக்க அவரது உடலுக்கு அருகில் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் தம்ளர்களையும் போட்டோம்.

2 பேரும் கைது

எனது கை மற்றும் கழுத்து பகுதியில் கத்்தியால் நானே வெட்டிக் கொண்டேன். பின்னர் அங்கிருந்து கணபதியை தப்பிச்சென்று விடும்படி கூறினேன்.
அதன் பிறகு உறவினர்களுக்கு போன் செய்து, வீடு அருகே மது அருந்திய வாலிபர்கள் அறிவழகனின் கழுத்தை அறுத்ததுடன், தன்னையும் தாக்கி நகையை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டதாக நாடகம் ஆடினேன்.

இதனால் போலீசாருக்கு எங்கள் மீது சந்தேகம் வராது என்று நினைத்தோம். ஆனால் போலீசார் கண்டு பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சுரேகா, கள்ளக் காதலன் கணபதி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மருத்துவ மனையில் சிகிக்சை பெறுவதால் சுரேகாவுக்கு அங்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.

இந்த கொலைக்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

4-வது சம்பவம்
குழந்தை சாதனா அளித்த தகவலை வைத்தே இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கினர். தாயின் கள்ளக்காதலால் ஒன்றும் அறியாத குழந்தை சாதனா தந்தையை இழந்ததுடன், தற்போது தனியாக தவித்து வருகிறது.

சென்னையில் கடந்த சில மாதங்களில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவரை கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் 4-வது சம்பவம் இதுவாகும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings