கடந்த நான்காயிரம் வருடங்களில் நடந்த போர்களைப் பற்றி விக்கிப்பீடியாவில் இருக்கும் தகவல்களைப் படிக்க, உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும். படித்துக் கொண்டே போகப் போக கொட்டாவி விட ஆரம்பித்து விடுவோம்.
ஆனால், இந்தத் தகவல்களை எல்லாம் ஒரு உலக வரைபடத்தில் எந்த போர் எங்கு நடந்தது, எப்போது நடந்தது என்பதை எல்லாம் குறித்து வைத்தால் எப்படி இருக்கும். நமக்கு புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்தானே.
தகவல்களை படங்களாகக் குறித்து வைத்து விளக்குவதற்குப் புகழ் பெற்ற நோட் கோட் (Node Goat) என்ற இணையதளம், உங்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இது போன்று ஏற்கனவே பல தகவல்களை இப்படி வழங்கி பிரபலமடைந்த இணையதளம் இது.
இப்போது விக்கிப்பீடியா (Wikipedia) மற்றும் டிபிபீடியா (Dbpedia.org) ஆகிய தளங்களில் இருந்து போர்களைப் பற்றியத் தகவல்களை இப்படி உலக வரைபடத்தில் பதிவு செய்து உள்ளதோடு,
நாம் இந்த ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை நடைபெற்ற போர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அப்படி ஆண்டுகளை தேர்ந்தெடுக்கும் வசதியையும் தந்திருக்கிறார்கள்.
உதாரணமாக, முதல் உலகப் போர் நடந்த இடங்களைப் பார்க்க வேண்டுமானால், வருடங்களை 1914 முதல் 1918 வரை மாற்றிக் கொண்டால், அந்தக் காலகட்டத்தில் நடந்த போர்கள் மட்டும் உலக படத்தில் குறிக்கப்பட்டு இருக்கும்.
இப்படி ஆண்டு வாரியான வசதியை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியோடு அவர்களே கிபி 200 ல் இருந்து கிபி 1500 வரையிலான போர்களுக்கு
ஒரு நிறம், 1500-ம் ஆண்டில் இருந்து 1914-ம் ஆண்டு வரை ஒரு நிறம், முதல் உலகப் போர் காலகட்டத்துக்கு ஒரு நிறம், முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்துக்கு ஒரு நிறம்,
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்துக்கு ஒரு நிறம், அதற்குப் பிறகான காலத்தில் இருந்து இன்று வரை ஒரு நிறம் என்று வசதியாக வகைப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.
போர்களை நாம் ஆதரிக்காவிட்டாலும், போர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு அவசியமானது. இந்த உலக வரைபடத்தை இங்கு பார்க்கலாம்
கடந்தகால வரலாற்றை மறந்த சமுதாயம் வளமான வருங்காலத்தைப் படைக்க முடியாது என்ற மேற்கோளை மனதில் வைத்துப் பார்த்தால் இந்தத் தகவல் அற்புதமானது.