உலகத்திலேயே சில்லறையை மையமாக வைத்து ஒரு சுரண்டல் நடக்க முடியும் என்றால், அது இந்தியா குறிப்பாகத் தமிழகத்தில் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
கடந்த முறை சிங்கப்பூரில் இருந்து முதன் முறையாகத் திருச்சி வந்த சமயத்தில் Exchange ல் பணம் மாற்றிய போது 100 ரூபாயாக இருந்ததால் பேருந்தில் என்ன பிரச்சனை செய்யப் போகிறார்களோ என்ற கவலையே இருந்தது.
என்ற கண்டபடி கடுப்பை ஏத்துறாங்க. இவர்களாலே Halls சாக்லேட் நிறுவனம் பெரிய பணக்கார நிறுவனமாக மாறி இருக்கும் என்று நினைக்கிறேன்.
பேருந்தில் நடத்துனர் பையில் சில்லறை இருந்தாலும் கொடுப்பதில்லை. 50 பைசா 1 ரூபாய் மீதம் இருந்தால், அது காந்தி கணக்குத் தான்.
வடிவேல் மாதிரி, கொடுப்பாரா என்று பார்த்துட்டே வர வேண்டியதாக இருக்கிறது. இறுதியில் கொடுப்பதே இல்லை, கொடுத்தால் உலக அதிசயம்.
இது மாதிரி உதாரணம் கூற ஏகப்பட்டது இருக்கிறது. உங்களுக்குத் தெரியாத உதாரணம் எனக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது!
இதெல்லாம் விடுமுறையில் வருகிற போது பார்த்து அடுப்பு இல்லாமலே நான் கொதி நிலைக்குப் போவதால் வந்த கடுப்புகள்.
கட்டணத் தள்ளுபடி
நமது மத்திய அரசாங்கம் கள்ளப்பணத்தை ஒழிக்கப் பற்று அட்டை (Debit card) கடனட்டை (Credit card) போன்றவற்றை ஊக்குவிக்கத்
தற்போது முயற்சித்து வருகிறது. இதற்குத் தற்போது விதிக்கப்படும் கட்டணங்களை ரத்து செய்யவும் பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம் நிறுவனங்கள் சிறு கடைகள் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதை நிறுத்துவதால், பொதுமக்கள் அட்டைகளை அதிகம் பயன்படுத்து வார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு முடிவு செய்து இருக்கிறார்கள்.
மிக நல்ல முயற்சி. இதன் மூலம் சில கடைகளில் கடனட்டை பயன்படுத்தும் போது வசூலிக்கப்படும் கட்டணத்தால் பொது மக்கள் கடனட்டை பயன்படுத்தும் தயக்கம் நீங்கும். அரசுக்கும் வரவு செலவு பரிமாற்றம் சரியான அளவில் கிடைக்கும்.
FlashPay
சிங்கப்பூரில் நம்முடைய பற்று அட்டை / கடனட்டையில் ஒரு வசதி உள்ளது. அதாவது நீங்கள் இந்த அட்டைகளில் இருக்கும் வசதி மூலம் எளிமையாகப் பணம் செலுத்தலாம். ஒரே முறையில் 100$ க்கு மேல் செலவு செய்ய முடியாது.
இந்தக் அட்டைகளில் ஒரு chip இருக்கிறது, கடைகளில் வைத்துள்ள சாதனத்தில் காட்டினால் அதுவே பணத்தை எடுத்துக் கொள்ளும். நீங்கள் இதற்காகக் கையொப்பம் இடுவதோ / Passcode அழுத்துவதோ அவசியமில்லை.
அட்டையை 2 நொடி காண்பித்தால் போதும். சிங்கப்பூரில் இந்தியா போலக் கடனட்டைக்கு Passcode கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே நம்முடைய கடனட்டை தொலைந்தால், வேறு யாரும் தவறாகப் பயன்படுத்தும் முன்பு உடனடியாக முடக்க வேண்டியது அவசியம்.
நம்ம ஊருக்கு வந்தால்..!
எவ்வளவு நன்றாக இருக்கும். காய்கறிக் கடை, மருந்துக் கடை, பல்பொருள் அங்காடி, உணவகம் போன்ற வழக்கமாக அதிகம் புழங்கும் இடங்களில் இதை நாம் எளிதாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சில்லறை பிரச்னையை அறவே தவிர்க்கலாம்.
நமக்கு யாரும் கடலை பர்ஃபியோ ஹால்ஸ் மிட்டாயோ கொடுத்து சரிக்கட்ட முடியாது . நமக்கும் மன உளைச்சல் குறையும். FlashPay என்பது இறுதியான பெயர் அல்ல.
ஒவ்வொரு நிறுவனமும் இந்த வசதிக்கு வெவ்வேறு பெயர்கள் (PayPass / PayWave) வைத்துள்ளன. இந்த வசதி நம்முடைய பேருந்தில் வந்தால் எப்படி இருக்கும்? வழக்கமான பயணச் சீட்டு முறை மாறி தற்போது கொடுக்கப்படும்
மின்சாதன பயணச்சீட்டு வரும் என்று நாமெல்லாம் நினைத்து இருப்போமோ! அது போல இதே வசதி இல்லையென்றாலும் வேறு முறை நிச்சயம் வரும்.
சென்னையில் இதை பரிசோதிக்கப் போகிறார்கள் அதாவது மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து இரண்டுக்கும் ஒரே அட்டை பயன்படுத்த முடியும்,
சிங்கப்பூர் போல ஆனால், இதற்குத் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பும். காரணம், நடத்துனர் பணி பறி போய்விடும்.