கை, கால்களை கட்டி வீதியில் கிடத்தி பெண்ணிற்கு சித்திரவதை | Hands and feet tied and tortured a woman lying in the street !

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடத்தப் பட்டிருந்தார். மனநலன் குறித்த விழிப்புணர்வும், மனித நேயமும் நம்மிடம் இல்லாமல் போனதை உணர்த்தியது இந்த சம்பவம்.


கோவை, சிவானந்தா காலனி அருகே மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் நடுவே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடத்தப்பட்டிருந்தார் அந்த இளம்பெண். கயிறை அவிழ்த்து விடுமாறு கதறி அழுதார் அந்த பெண்.

அருகில் இன்னொரு பெண்ணும் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். எதற்காக? யாரால் கட்டப்பட்டார்? எதற்கு இன்னொரு பெண் அழுகிறார் என யாராலும் யூகிக்க முடியவில்லை.

கட்டப்பட்ட பெண் தொடர்ச்சியாக கதறிக்கொண்டிருக்க… அருகில் அமர்ந்திருந்த பெண் அழுது கொண்டே இருந்தார். இதைப்பார்த்த சிலர், காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கை, கால்கள் கட்டப்பட்ட அந்த பெண்ணை கட்டுகளில் இருந்து விடுவித்தனர். அருகில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது, அவர் கட்டப்பட்டிருந்த பெண்ணின் தாயார் தனலட்சுமி என்பது தெரியவந்தது.

கோவை கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமியின் மகளான பியூலா, கணவரால் கைவிடப்பட்டதாலும், பிறந்த குழந்தை இறந்து பிறந்ததாலும் மனச்சிதைவு ஏற்பட்டதாகவும்,

பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து பியூலா ஆக்ரோஷமாய் எல்லோரையும் கல்லை கொண்டு அடிப்பதால் இப்படி கட்டி போட்டு வைத்திருப்பதாக சொன்னார் தனலட்சுமி.

தனது மகளை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக பியூலாவின் தாயார் தனலட்சுமியிடம் பேசினோம். “மூணு வருஷத்துக்கு முன்னாடி என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்துச்சு. கர்ப்பமா இருக்கும் போது பொண்ணை விட்டுட்டு அவன் போயிட்டான்.

கொஞ்ச நாள்ல குழந்தையும் பொறந்துச்சு. ஆனா பிறந்த குழந்த இறந்து தான் பிறந்துச்சு. இந்த 2 சம்பவங்களால ரொம்பவே உடைஞ்சு போயிட்டா. பைத்தியம் மாதிரி கத்துவா. அப்படியே மனநலம் பாதிக்கப்பட்டவளாவே ஆயிட்டா.

கடந்த 2 மாசமா ரொம்ப மோசமா நடந்துக்க ஆரம்பிச்சா. திடீர் திடீர்னு ஆக்ரோஷமா நடந்துக்குவா. அக்கம்பக்கதுல யாரையாவது பார்த்தா கல் எடுத்து வீசுவா. நான் வாடகை வீட்டுல இருக்கே.


இவ இப்படி பண்றதால வீட்டை காலி பண்ணச் சொல்றாங்க. வீட்டை காலி பண்ணீட்டு நான் என்ன பண்ணுவேன்?. வீட்டுலயும் வைச்சுக்க முடியலை.

கவர்மென்ட் ஆஸ்பிட்டல் கூட்டீட்டு போனாலும், மாத்திரை கொடுத்து துரத்தி விட்டுடுறாங்க. தனியார் காப்பகத்துல வைச்சு பராமரிக்க எங்கிட்ட வசதியும் இல்லை.

மகளை வெளியே கூட்டீட்டு போயிடுங்கனு வீட்டு ஓனர் சொன்னதால வெளியில கூட்டீட்டு வந்துட்டேன். ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்கறா என்ன செய்யறதுன்னே தெரியலை.

அதான் கட்டி போட்டு வைச்சுட்டேன். எப்படியாவது என் மகளை காப்பகத்துல சேத்து காப்பாத்துங்கப்பா,” என்றார் கண்ணீர் மல்க.

இதையடுத்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி பியூலாவை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவில் சேர்த்து, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளும் நாம் மனநல பாதிக்கப்பட்டவர் என்றால் விலகியே நிற்கிறோம்.

மனநல பாதிப்பு குறித்த விழிப்புணர்வும், மனித நேயமும் நம்மிடம் இல்லாமல் இருப்பதை வெளிப்படையாக உணர்த்தி விட்டது இந்த நிகழ்வு.
Tags:
Privacy and cookie settings