ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்கா நல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடை பெறுகிறது.
மிருகவதை என்ற பெயரால் தமிழரின் பண்பாட்டு உரிமை யான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. கடந்த 2 ஆண்டுகாலமாக இத்தடை உடையும் என தமிழகம் காத்திருந்தது.
ஆனால் தடை உடையவில்லை. மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு தமிழக மக்கள் போர்க் களத்தில் குதித்தனர்.
அலங்கா நல்லூரில் மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கி வைத்த புரட்சி விதை தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது.
சென்னை மெரினாவில் பல லட்சம் பேர் 5 நாட்களாக திரண்டு போராடினர். ஒட்டு மொத்த தமிழகமே வீதிக்கு வந்து போராடியதால் வேறு வழியின்றி அரசுகள் பணிந்தன.
மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இதற்கான அவசர சட்டத்தை ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்திருக்கிறார்.
வரலாற்றில் இடம் பிடித்த ஜல்லிக்கட்டுப் புரட்சி தடையை உடைத்து சரித்திரம் படைத்திருக்கிறது! வென்றது தமிழர் படை!