பரோட்டா சாதனை... ஒரே நாளில் 3,526 பரோட்டா !

நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு? என்கிற தலைப்பில் பரோட்டா சாப்பிடும் போட்டி நடத்தி அசத்திய அதே நெல்லை மாவட்டத்தில், இன்னுமொரு பரோட்டா சாதனை. 
பரோட்டா சாதனை... ஒரே நாளில் 3,526 பரோட்டா !
ஒரே நாளில் 3500க்கும் அதிகமான பரோட்டாக்களை தயாரித்து பரோட்டா மாஸ்டர் ஒருவர் சாதனை படைத்து இருக்கிறார்.

செய்யும் வேலை எதுவாக இருந்தாலும், அதில் நேர்த்தியும் திறமையும் இருந்தால் பிறரின் கவனத்தை ஈர்த்து சாதனை படைக்க முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. 

அதே வரிசையில் நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள மேலகரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற இளைஞரும் இணைந்து உள்ளார். 

பரோட்டா கடையில் வேலை செய்து வந்தபோதிலும், சாதிக்க முடியும் என்பதை தற்போது நிரூபித்து உள்ளார். 

கடந்த 13 வருடங்களாக பரோட்டா கடைகளில் மாஸ்டராக வேலை செய்த அனுபவத்தைப் பயன்படுத்தி சாதனை நிகழ்த்தி பலரது பாராட்டையும் பெற்று இருக்கிறார்.

தென்காசியில் உள்ள ஸ்ரீ பாலாஜி பவனில் இவர், 24 மணி நேரத்தில் 3526 பரோட்டாக்களை செய்து பார்வையாளர்களை அசத்தினார். இதற்காக 200 கிலோ மாவு தேவைப்பட்டது. 
இந்த சாதனையின் போது செய்யப்பட்ட பரோட்டாக்கள் அனைத்தும் அனாதை இல்லங்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த சாதனை முயற்சியானது வீடியோ கேமராவில் முழுமையாக பதிவு செய்யப்பட்டது. 

அத்துடன், வல்லுநர் குழுவினர் அவரது முயற்சியை நேரில் கண்காணித்ததுடன், பரோட்டாக்களின் தரத்தையும் உறுதிப் படுத்தினர்.

ராஜேந்திரனின் தந்தை கந்தசாமி, தாய் ராஜம்மாள், சகோதரர் விவேகானந்தன் மற்றும் நண்பர்கள் உடன் இருந்து முழுமையாக ஒத்துழைப்புக் கொடுத்ததுடன் உற்சாகப் படுத்தினர். 

அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் அவர் இந்த சாதனையை செய்து முடித்தார். அவருக்கு தென்காசியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் உறவினர்கள் மற்றும் ந்ண்பர்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.

இந்த சாதனை குறித்து ராஜேந்திரனிடம் பேசினோம். நான் பத்தாவது வரை மட்டுமே படித்து விட்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக ஹோட்டல் வேலைக்குச் சென்றேன். 
அதில் திறமையாக உழைக்க ஆரம்பித்ததால் குறுகிய காலத்திலேயே பரோட்டா செய்யும் பக்குவத்தைக் கற்றுக் கொண்டேன். 

அதன் பிறகு நானே பரோட்டா மாஸ்டராக மாறினேன். அதனால் எனக்கு பல ஹோட்டல்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 

கடந்த 13 வருடமாக நான் பரோட்டா மாஸ்டராக இருக்கிறேன்.வேலை செய்வது ஒருபுறம் இருந்தாலும், நாம் படிக்க முடியாமல் போய் விட்டதே என்கிற ஆதங்கம் மட்டும் எனக்குள் இருந்து வந்தது. 

அதனால், எனது நண்பர்களின் உதவியால் திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பில் சேர்ந்து படித்து வருகிறேன். எனது தொழில் பரோட்டா தயாரிப்பது என்று ஆகிவிட்ட சூழலில், அதில் வேகமாக செயல்படுவேன். 

எனது திறமையையும் வேகத்தையும் பார்த்து வியந்த நண்பர்கள் சிலர், ஒரு நாள் முழுவதும் பரோட்டா செய்து சாதனை படைக்குமாறு சொன்னார்கள். அவர்களது ஆலோசனையால் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டேன். 

எனது குடும்பத்தினர் நண்பர்கள் மட்டும் அல்லாமல் அறிமுகமே இல்லாத பலரும் எனது சாதனை முயற்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்களின் ஒத்துழைப்பால் மட்டுமே என்னால் இந்த சாதனையை செய்ய முடிந்தது. 
எந்த தொழிலைச் செய்தாலும் அதில் நமது திறமையை  பயன்படுத்தி சாதனை படைக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு தெரியப் படுத்தவே இந்த முயற்சியில் ஈடுபட்டேன். 

அதில் என்னால் சாதனை படைக்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார் உற்சாகத்துடன்.
Tags:
Privacy and cookie settings