மோடியை மதித்து! உள்ளுர் கரை வேட்டிகளை மிதித்து, சோஷியல் மீடியாவில் முதல்வரை இயக்கிய மாணவச் செல்வங்களே! நான் 23 ஆண்டு காலம் பத்திரிகையாளராகவும், சிறப்பு கட்டுரைகள் எழுதுபவனாக தமிழ்நாட்டில் பணியாற்றி வருகிறேன்.
இந்த காலகட்டத்தில் பல போராட்டங்களை விமர்சித்திருக்கிறேன். பல விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளேன்.
என்போலவே பிரிண்டிங் மீடியா, விஷூவல் மீடியா, ஆகியவற்றில் ஆலோசனைகள் என்கிற பெயரில் திணித்து வந்த அம்சங்கள் ஏராளம்.
குறிப்பாக 2014 மே மாதம் 7 ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
என்ன செய்ய முடிந்தது எங்களால். வழக்கம் போலவே கட்டுரைகளில் ஆராய்ந்தோம், நேரடி நிகழ்ச்சிகளில் கூவினோம்.பேமென்ட் வாங்கிக்கிட்டு அடுத்த செய்திக்கு தாவினோம்.
அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அவ்வாறே ஜல்லிக்கட்டு மேட்டரை பாஸ் செய்தனர். அப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடியது. வாடிவாசல்கள் வாடியது.
இடையே மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், ஜாதி தலைவரின் மாநாடுகள், அரசியல் ஸ்டார் இறப்பு, அதன் பின்னர் நடக்கும் டிராமாக்கள், சொத்துக்காகவும், சொந்தங்களுக்காகவும் நடக்கும் நீயா நானா போட்டி என இவைகளுக்கு மத்தியில்,
என் போன்றோர் பார்வை ஜல்லிகட்டை விலக்கி வைத்திருக்க, 2017 ஆம் ஆண்டு பொங்கலுக்கு பீட்டாவையும், ஜல்லிக்கட்டு தடை பக்கம் மீண்டும் திரும்பினோம்.
தமிழக மெங்கும் ஜல்லிகட்டுக்கு தடை விதித்தது அரசு. நேரலைகளை காட்டி டி.ஆர்.பி.ரேட்டை கூட்டிக் கொண்டது ஊடகங்கள்.
இம்முறையும் வேடிக்கை பார்க்க விரும்பாத மாணவச் செல்வங்கள் கொதித்தார்கள். அந்த நேரத்தில் பாலமேட்டில் ஏமாற்றப் பட்டார்கள்.
மறுதினம் அலங்கா நல்லூரில் அடக்கி விட்டார்கள் அரசை. மாணவர் அங்கு கொளுத்திய தீ இன்றைக்கு தமிழகத்தையும் தாண்டி, கடல் பல கடந்து பற்றி எரிந்து க் கொண்டிருக்கிறது.
தலைமை ஏதும் இல்லை, ஏன் எதற்கு தலைமை என்று கூட சிந்திக்க வில்லை. அசத்தல் களத்தில் விண்ணை தொட்டு விட்டனர்.
ஆஹா! பொட்டலமே கொடுக்காமல் கூட்டமா? வா ஓடிப்போய் ஒட்டிக் கொள்ளலாம் என்று வேட்டியை வரிந்து கட்டி பாய்ந்த அரசியல்வாதிகளை அவிழ்த்து திருப்பி விரட்டினர் செல்வங்கள்.
ஏன் ஒரு தொலைக்காட்சி ஓ.பி. வேனுக்குக் கூட அதே கதிதான். மாணவச் செல்வங்களின் உரிமைக் குரலை போராட்டம் என்று சொல்லி வர்ணிக்க இன்றைக்கு தொலைகாட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
எங்க சேனல் மாணவர்களுடன் கைகோர்த்துள்ளது என்று சொல்வதில் ஊடகங்கள் பெருமிதம் கொள்கிறது. ஆனால், மாணவர்கள் நம்புவது சோஷியல் மீடியாக்களை மட்டுமே.
சோஷியல் மீடியா என்றால் பேஸ் புக், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்றவைகளே அவை. இவை போதும் எங்களுக்கு என்பதே மாணவர்களின் கோஷம். பத்திரிகை செய்திகளால் தான் புரட்சி வெடிக்கும்.
இன்றோ சோஷீயல் மீடியாவால் வெடித்த மாணவர் புரட்சியை கவர் செய்து கொண்டிருக்கிறார்கள். 234 எம்.எல்.ஏ.க்கள், 40 எம் பி. க்கள் தேவையில்லை எங்களுக்கு, என்கிறார்களே தில்லாக!
உண்மை தான். இந்த விஷயத்தின் மீது எப்படி விவாதம் நடத்துவது என்று நாக்கு வியாபாரிகள் சுருட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஊடகங்களும் எழுத்தாளர்களும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ய முடியாததை மாணவர்கள் செய்து காட்டி விட்டனர்.
ஜல்லிகட்டு மட்டுமில்லீங்க மணல் கொள்ளை, பெப்சி, கொக்கோ கோலா என்று எல்லாவற்றுக்கு இருக்கு வேட்டு என்கிறது மாணவர் புரட்சிப்படை.
எவ்வளாவோ எழுதினோம், எத்தனையோ மேடைகளில் முழங்கினர் ஒன்றுமே நடக்கலை! மாணவர்கள் எழுந்தனர்! ஜல்லிக்கட்டை நடத்தினர். எனவே நான் கையாலாகதவனாகவே உணருகிறேன்.
எங்களுக்கு கொள்கையில்லை. ஆனால், மாணாவர்களே உங்கள் கொள்கை நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆகவே புதியதோர் தமிழ் உலகத்தை சாதிக்க வந்த மாணவர்களே,ஜாதி,மதம், ஊர் கல்வி பார்க்காத இளைஞர்களே.
குளிர், வெயில், மழையை மதிக்காத வெண் உள்ளங்களே! நான் என்னை கையாலாகதவனாகவே உணருகிறேன். உன்னிடம் தோற்ற நான், நீ கண்ட வெற்றிக்காக சல்யூட் அடிக்கிறேன்.
தொடருங்கள் மாணவச் செல்வங்களே உங்கள் ஒழுக்கமிக்க அறவழிப் போராட்டத்தை! தேர்தலிலும் அது பங்காற்றட்டும். போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டவர்களின் வேஷம்.
உலக வரலாற்றில் முதன் முதலாக எழுந்த மாணவர் புரட்சி, அதை செய்தது தமிழர். உங்க காலத்தில் நான் வாழ்ந்ததை பெருமை கொள்கிறேன். ஏன்னா நினைப்பை மாற்றியவர் மாணவர்கள். இளையவர்.
ஒண்ணு சேர்த்துட்டீங்க! புரட்சியும் செய்துட்டீங்க! தொடர்பிலேயே இருங்க! சாதிக்க இருக்கு நிறைய… உங்களுக்கு இந்த ஏழை எழுத்தாளனின் வீர வணக்கம்.
ம.பா.கெஜராஜ், எம்.ஏ. செய்தியாளர்.