தஞ்சையில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். தோழி கண் எதிரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் குழுந்தான் குளம் பனகல்சாலையை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகள் கீர்த்திகா (வயது 21).
இவர் திருவாரூரில் உள்ள அரசு கல்லூரியில் எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் அதே ஊரை சேர்ந்த கார்த்திகா (21) என்பவரும் படித்து வருகிறார்.
கீர்த்திகாவும், கார்த்திகாவும் தஞ்சை சீனிவாசம்பிள்ளை சாலையில் உள்ள காம்ப்ளக்சில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு பாடத்திட்டம் தொடர்பாக படிப்பதற்காக காலை 8.30 மணிக்கு வந்தனர். பின்னர் மதியம் அவர்கள் வீட்டிற்கு செல்வதற்காக கம்ப்யூட்டர் சென்டரை விட்டு வெளியே வந்தனர்.
மாணவி கீர்த்திகா முன்னேயும், கார்த்திகா பின்னேயும் சென்றனர். காம்ப்ளக்ஸ் வாசலில் வந்த போது கீர்த்திகா எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி சென்ற அரசு பஸ்சின் பின்சக்கரம் அவரின் தலை மீது ஏறி நசுக்கியது. இதில் கீர்த்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தனது கண்முன்னே தோழி கீர்த்திகா பஸ்சின் சக்கரத்தில் சிக்கி இறந்ததை கண்டதும் கார்த்திகா கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு,
சப்– இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.