புத்தாயிரம் ஆண்டுக்குப் பின்னர் பெடா (PETA), புளூ கிராஸ் போன்ற பெருநகரங்களை மையமாகக் கொண்ட விலங்குநல அமைப்புகளால் முன் வைக்கப்பட்ட பார்வையே ஜல்லிக் கட்டைத் தடை செய்ய வேண்டும் என்பது.
காளைகள் துன்புறுத்தப்படுவதால், அதைத் தடை செய்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர்கள் செயல்பட்டார்கள். ஆனால், உண்மை என்னவோ அவர்கள் சொல்வதற்கு மாறாக இருக்கிறது.
அவர்கள் சொல்வதுபோல ஜல்லிக்கட்டில் மாடுகள் கொடுமைப் படுத்தப் படுகின்றன என்றால், அந்தச் சம்பவங்கள் ஏன் மிகப் பரவலாக இல்லாமல், குறைவாகப் பதிவுசெய்யப் பட்டுள்ளன?
அல்லது அது எப்படி அதிக அளவில் ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வராமல் போகிறது?
அதே நேரம், காளைகள் - காளைக் கன்றுகள் இறைச்சிக் கூடத்துக்குப் பெருமளவு செல்வதைத் தடுப்பதில் அவர்களுடைய அக்கறை இவ்வளவு வீரியமாக ஏன் வெளிப்பட வில்லை?
ஜல்லிக்கட்டு நடக்காத நாட்டின் மற்ற பகுதிகளில் காளைக் கன்றுகள் இறைச்சிக் கூடத்துக்குத் தான் பெருமளவு செல்கின்றன.
அதற்குத் தடை விதிக்குமாறு அவர்கள் கூறவில்லையே கோயிலில் யானைகள் கட்டி வைத்து பயன்படுத்தப் படுவதைப் பற்றி
இந்த அமைப்புகளின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்புகிறார் மூத்த சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன்.
ஜல்லிக்கட்டுத் தடைக்கு வேறு பின்னணி உண்டா?
உலக மயமாக்கலுக்குப் பின்னர் இது போன்ற உள்ளூர் கலாச்சார நிகழ்வுகளை ஏதாவது ஒரு வழியில் வலிந்து நிறுத்துவதற்கு உலக நிறுவனங்கள் முயற்சிப்பதை உற்று நோக்க வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கத்திய மாடுகளுடன் பெரும் பால் பண்ணைகளை அமைப்பதற்கு, உள்நாட்டு மாட்டினங் களைக் கொண்டாடும் ஜல்லிக்கட்டைப் போன்று ஆழ வேரூன்றிய விழாக்கள்
மிகப் பெரிய தடையாக உள்ளன. உள்ளூர் மாட்டினங்கள் மீதான பிடிப்பை, தங்களுக்கு எதிரானதாகப் பன்னாட்டு வணிக பால் நிறுவனங்கள் கருதுகின்றன.
வளரும் நாடுகளின் விவசாயத்தில் விதை உற்பத்தி, விதை விற்பனையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர
அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ முயற்சிப்பதைப் போல, ஜெர்சி, ஃபிரீசியன், பிரவுண் ஸ்விஸ் போன்ற
வெளிநாட்டு மாட்டினங்களைப் புகுத்துவதற்குப் பல பன்னாட்டு நிறுவனங்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவை ஊடுருவுவதற்குப் பண்பாட்டு நிகழ்வுகளை நிறுத்துவது, அது சார்ந்த வெறுப்பைப் பரவலாக்குவது இவர்களுடைய ஒரு உத்தி.
இனிமேல் ஜல்லிக்கட்டு நடக்க வழியே இல்லை என்றால், என்ன ஆகும்?
ஜல்லிக்கட்டு போன்ற உள்ளூர் பண்பாட்டு - உயிர் பன்மயப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தடுக்கப்படுவது, இயற்கையான இனச்சேர்க்கை மூலம்
மரபணு வளம் மிகுந்த நம் நாட்டு மாட்டினங்களின் எண்ணிக்கை பெருகுவது தடுக்கப்படும்.
இதற்கு மாற்றாகக் கூறப்படும் செயற்கைக் கருவூட்டலை மேற்கொள்வதற்கு அரசையோ, தனியார் நிறுவனங்களையோ,
விவசாயிகளைச் சார்ந் திருக்க வைத்திருப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் மாட் டினங்களின் மரபணு வளமும் வீழ்ச்சியடைகிறது.
ஜல்லிக்கட்டை முறைப்படுத்தி நடத்தக் கூடாதா?
மாட்டுக்கும் மனிதர்களுக்கும் பங்கம் இல்லாமல் ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்தில்லை. அதற்கான விதிமுறைகள்,
கட்டுப்பாடுகளை வரையறுத்து முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாறாக, ஜல்லிக்கட்டையே ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது முறையல்ல!
Tags: