தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத் துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, ஜெ., மீது, கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடரப் பட்டது.
கூட்டு சதி மற்றும் சொத்துகள் சேர்ப்புக்கு உடந்தையாக இருந்ததாக, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும், வழக்கு பதிவு செய்யப் பட்டது.
கடந்த, 1996ல் பதிவான இந்த வழக்கில், 18 ஆண்டுகளுக்கு பின், தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதற்கு முன், இவ்வழக்கு பல கட்டங்களை, அடுத்தடுத்து தாண்டி வந்தது. தமிழகத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பரில் தீர்ப்பு வழங்கினார்.
ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டு சிறை, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை, தலா, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பதவி பறிபோனது; பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், ஜெ., உள்ளிட்ட நால்வரும் அடைக்கப்பட்டனர்.
20 நாட்களுக்கு பின், உச்ச நீதிமன்றம், நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கியது. ஜாமினில் வெளியே வந்ததும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெ., உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நடந்தது.
மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த, நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தர விட்டார். கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
இம்மனுவை, நீதிபதிகள், பி.சி.கோஷ், அமித்வ ராய் ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்கு பின், 2015 ஜூனில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
விசாரணை முடிந்து, ஆறு மாதங்கள் ஆகிய நிலையில், மேல்முறையீட்டு வழக்கில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்து வந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமை யிலான அமர்வு முன்பு ஆஜராகி,
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து ஆவலுடன் காத்திருப்பதாக கூறியதோடு, அது தொடர்பான கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.
அதற்கு நீதிபதிகள், தீர்ப்பு தொடர்பான பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன. இன்னும் இரு வார காலம் காத்திருங்கள், என்று கூறினர்.
இதையடுத்து, இன்று செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
சசியாக 10.30 மணிக்கு நீதிபதிகள் சசிகலா உட்பட மூவர் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கினர்.