எல்லாப் பிரவுசர்களிலும் விசைப்பலகை பயன்பாட்டுக்கான குறுக்கு வழிகள் உண்டு. இந்தக் குறுக்கு வழிகளில் சில பரவலாக அறியப்பட்டவை. இவை பலரால் பயன்படுத்தப் படுகின்றன.
ஆனால், பல அருமையான குறுக்கு வழிகள் இன்னமும் வெகுஜனப் பயன்பாட்டுக்கு வராமல் இணைய ரகசியங்களாகவே இருக்கின்றன.
அந்த வகையில் 'ஷிப்ட் கீ' சார்ந்த சில முக்கியப் பயன்பாட்டை 'மேக்யூஸ்ஆப்' இணையதளம் அடையாளம் காட்டியுள்ளது.
உங்கள் மவுசில் 'ஸ்க்ரோல் வீல்' எனும் சிறிய சக்கரம் இருப்பதைக் கவனித்திருக்கலாம்.
இணையப் பக்கங்களை மேலும் கீழுமாக நகர்த்த இந்தச் சக்கரத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் சில இணையப் பக்கங்களில் பக்கவாட்டில் நகர்த்தும் தேவை ஏற்படலாம்.
இது போன்ற இணையப் பக்கங்களில் உலாவும் போது ஷிப்ட் கீயைப் பிடித்தபடி மவுஸ் சக்கரத்தை நகர்த்தினால் போதும்;
இணையப் பக்கத்தின் உள்ளடக்கம் பக்கவாட்டில் நகரும். அதே போல ஒன்றுக்கும் மேற்பட்ட டேப்களைப் பயன்படுத்தும் பழக்கம், உங்களில் பலருக்கு இருக்கலாம்.
இப்படிப் பல இணைய தளங்களைப் பயன்படுத்தும் போது தற்செயலாக ஒரு இணைய தளத்தை மூடிவிடும் நிலை உண்டாகலாம்.
'அடடா பார்த்துக் கொண்டிருந்த பக்கத்தை மூடி விட்டோமே' என்று கவலை கொள்ள வேண்டாம். இப்போதும் ஷிப்ட் கீ கைகொடுக்கும்.
ஷிப்ட் கீ மற்றும் கண்ட்ரோல் கீயைப் பிடித்தபடி ‘டி’ எழுத்தை அழுத்தினால் சற்று முன் மூடப்பட்ட இணையதளம் மீண்டும் தோன்றும்.
அப்படியே பிடித்தபடி ‘டி’ எழுத்தை அழுத்திக் கொண்டிருந்தால் வரிசையாக மூடப்பட்ட தளங்கள் தலைகீழ் வரிசையில் தோன்றும்.
எப்போதுமே ஒன்றுக்கும் மேற்பட்ட இணைய தளங்களைத் திறந்து வைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு, இந்தக் குறுக்கு வழி உற்சாகத்தைக் கொடுக்கும்.
தற்செயலாக 'ஸ்பேஸ் பாரை' அழுத்தும் போது இணையப் பக்கத்தின் கீழ்ப் பகுதிக்கு போய் விடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
இதையே ஷிப்ட் கீயை அழுத்தியபடி செய்தால், மீண்டும் இணையப் பக்கத்தின் மேலேறி வந்து விடலாம்.
சற்றே நீளமான கட்டுரையைப் படித்ததும், ஒரே தாவலில் மேலே வர இந்த வசதி கைகொடுக்கும்