முன்னாள் எம்.பி.யும், நடிகையான விஜயசாந்தி, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வராக பதவியேற்க ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை விஜயசாந்தி.
இருப்பினும், அவரது குடும்பம், தெலுங்கா னாவுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டது. கடந்த 1980களில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிரடி ஆக்சன் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.
150க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், நடிப்பில் இருந்து விலகி, அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
50 வயதாகும் விஜயசாந்தி, பாஜக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகளில் பணிபுரிந்து, தற்போது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இணைந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த விஜயசாந்தி, தமிழக அரசியலில் தற்போது நிலவும் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெரும்பான்மை எம்எல்ஏ.,க்கள் மற்றும் எம்பி.,க்களின் ஆதரவைப் பெற்று, ஆளுங்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவே, சட்டப்படி ஆட்சியமைக்கும் அதிகாரம் பெற்றவர்.
அதனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ், சசிகலாவை தேர்வு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் கால நீட்டிப்பு செய்வது ஏற்படையதல்ல, எனவும் விஜயசாந்தி குறிப்பிட்டுள்ளார்.