கோக், பெப்சிக்கு, பவண்டோ, மாற்றமாகுமா?

மாணவர்கள் போராட்டத்தால் விளைந்த நன்மைகளுள் ஒன்று பெப்சி கோக் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பானங்களுக்கான எதிர்ப்பு.
தற்போது இதற்கான ஆதரவு விரிவடைந்து வருகிறது. வணிகர் சங்கம் மார்ச் 1 முதல் இதன் விற்பனையைத் தமிழகத்தில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது வணிகர்கள் எடுத்த முடிவு எனவே இதற்குத் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

கல்வி நிறுவனங்கள் பல ஆதரவு தெரிவித்துத் தங்கள் கல்வி வளாகத்தில் இவ்வகைப் பானங்களைத் தடை செய்துள்ளன. வரவேற்க வேண்டிய செயல்.

தடையை எவ்வளவு நாள் வணிகர்கள் பின்பற்றுவார்கள் என்ற சந்தேகம் எனக்குள்ளது. 

நாளையே வேறு காரணம் கூறி தடையை திரும்பப் பெற்றால் வியப்படைய எதுவுமில்லை. மக்கள் தான் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும்.

உள்ளூர் பானங்கள் மாற்றாகுமா?

சிலர் பெப்சி கோக் போன்ற அந்நிய பானங்களுக்கு மாற்றாக உள்ளூர் “காளிமார்க்” தயாரிப்பான பவண்டோ போன்ற பானங்களைக் கூறி வருகிறார்கள்.

உள்ளூர் தயாரிப்பை வரவேற்க வேண்டியது நல்லது தான் அதற்காக தங்க ஊசி என்பதால் எடுத்துக் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?!

எதற்கு இவ்வகைப் பானங்களுக்கு எதிர்ப்பு?
உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. நம் மாநிலத்தின் நீராதாரத்தை அழித்து விவசாய த்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக் குறையை ஏற்படுத்து கிறார்கள்.

இரண்டுமே எந்த மிகைப் படுத்தலும் இல்லாத உண்மையான காரணங்கள்.

பவண்டோ போன்ற பானங்கள் தற்போது பெப்சி கோக் போன்ற தயாரிப்பு களோடு ஒப்பிடும் போது பிரபலமில்லை. எனவே, இதன் தாக்கம் பெரியளவில் இல்லை.

நாளை பெப்சி கோக் மாற்றாக வரும் போது இவர்களும் பெப்சி கோக் போலவே தான் தண்ணீரை எடுக்கப் போகிறார்கள். 

இதுவும் காற்றடைக்கப் பட்ட பானமே! பெப்சி கோக் அளவுக்கு இல்லை யென்றாலும் இதுவும் உடலுக்கு ஏற்றதல்ல.

இன்று குறைந்த அளவில் தண்ணீரை எடுப்பவர்கள் விற்பனை அதிகரித்தால், அதிகளவில் தண்ணீரை உறிஞ்சப் போகிறார்கள் இதில் பெப்சி கோக் என்ன? பவண்டோ என்ன? எல்லோருமே ஒன்று தானே!

உள்ளூர் தயாரிப்பு என்பதாலே இதை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம்?

இதுவும் நீர் ஆதாரத்தை அழிப்பது தானே! இவர்கள் எந்த இடத்தில் நிறுவனத்தை வைத்து ள்ளார்களோ அங்கே நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்தில் சென்று விடும்.

விவாசாய த்தை ஊக்குவிக்கும் தின் பண்டங்களை, பானங்களை ஊக்கு விக்கலாமே!
உடலுக்குத் தீங்கு விளைவிக்காத அதே சமயத்தில் நீர் ஆதாரத்தை அழிக்காமல் விவசாய த்துக்கு உயிர் கொடுக்கக் கூடிய இளநீர், நன்னாரி சர்பத், பதனீர் போன்றவற்றை ஊக்குவிக்கலாமே!

இவை விவசாயி களுக்கும் உதவி செய்யும், சுற்று சூழலும் கெடாது. இதன் மூலம் இயற்கை வளங்கள் அழிக்கப் படுவது குறைக்கப் பட்டு விவசாயம் தொடர்பாக வளர்ச்சி ஏற்படும்.

காளிமார்க் நிறுவனம் இது சார்ந்த வழிகளில் சிந்திப்பது நல்லது. ஏனென்றால், மாற்றாகச் சிந்தித்து அதை நோக்கி பயணிப்பது தனக்கு ஏற்படும் எதிர்கால இழப்புகளைக் குறைக்கும்.

இந்த வருடம் சில அரசுப் பள்ளிகளில் வழக்கமாகத் தரும் மிட்டாய் களுக்குப் பதிலாகக் கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவை தரப்பட்டன என்பது நல்ல மாற்றம்.

இவற்றை உண்பது இழிவாகவும் வெளிநாட்டு சாக்லேட்டுகளை உண்பது பெருமையாகவும் நினைக்கும் மனநிலை தற்போதைய பெற்றோர் களிடையேயும் குழந்தைகளுடையேயும் உள்ளது.

எனவே, இந்த மாற்றங்கள் உடனே சாத்தியமல்ல. மாற்றங்கள் நடைபெற காலங்கள் எடுக்கும்.

தண்ணீரின் முக்கியத்துவம்
கோக், பெப்சிக்கு, பவண்டோ, மாற்றமாகுமா?
இது போன்ற உடலுக்குத் தீங்கு விளை விக்காத உணவுப் பண்டங்களையும், விவசாயத்தை வளர்ச்சியில் கொண்டு செல்ல உதவும் பானங்களையும் ஊக்குவிப்பது நம் உடலுக்கும், விவசாயத் துக்கும் நல்லது.

பெப்சி கோக் தடை மட்டும் போதாது அந்நிறு வனங்கள் தமிழகத்தில் தண்ணீர் எடுப்பதற்கு அரசும் அனுமதிக்கக் கூடாது.

தண்ணீரின் முக்கியத் துவத்தை இன்னும் கூட உணராதவர்கள் அரசு உட்பட, நிச்சயம் இந்த வருடம் உணர்வார்கள். காரணம், தமிழகத்தில் இந்த வருடம் தண்ணீர் பிரச்சனை தலை விரித்து ஆடப் போகிறது.

இவ்வளவு நாட்களாக தூர் வாராமல் (அரசால் கவனிக்கப் படாமல்) இருந்த ஆறு, ஏரி, குளங்கள் வறட்சி நெருக்கடி காரணமாக கவனிக்கப்படும். துன்பத்திலும் நல்லது என்று நேர்மறையாக நினைத்துக் கொள்ளுங்கள்.
தங்க ஊசி என்பதால், கண்ணில் குத்திக் கொள்ளாதீர்கள். நீர் ஆதாரத்தை அழிக்கும் எந்தச் செயலுக்கும் துணை நிற்காதீர்கள்.

இது போன்ற பானங்களைக் குடிக்காமல் இருக்க முடியும் ஆனால், தண்ணீரை குடிக்காமல் இருக்க முடியுமா?! சிந்தியுங்கள்.
Tags:
Privacy and cookie settings