சமூகத்தை கொள்ளும் கொலை தளங்கள்?

முகநூலில் தன் புகைப்படத்தை ஆபாசமாக்கி வெளியிட்டதால், சேலத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்தக் கொடுமைக்குப் பின்னே... ஒருமுறை என் மாணவி சொன்னாள்... 

‘கூகுளில் வேலைவாய்ப்புச் செய்திகளைத் தேடலாம் என ‘வே’ என டைப் செய்ததுமே, வேலைக்காரியின் லீலைகள் என்று வந்த’தாக...

வேலைவாய்ப்பு செய்திகளைத் தேடுபவர்களின் கவனத்தை ஆபாச பக்கங்கள் மீது இணையம் திசை திருப்புவதை மறுப்பதற்கில்லை.

முகநூலில் சொல்ல முடியாத அளவு எண்ணற்ற ஆபாச பக்கங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஆசாமிகள் அந்த பக்கங்களை ‘லைக்’ செய்கின்றனர். பின்னூட்டம் இடுகின்றனர். 

நமக்கே தெரியாமல் நம் புகைப்படங்களை பலருக்கும் பந்தி வைக்கின்றனர். இந்த வக்கிரம் சின்னஞ்சிறு குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் பலரது முயற்சியால் இதுபோன்ற கேவலமான முகநூல் பக்கம் முடக்கப்பட்டது.

அந்தப் பக்கங்களில், பச்சிளம் குழந்தைகளை ஆபாசமாக வர்ணித்து பின்னூட்டமிட்ட அனைவரும் நம் அருகில் தான் இருக்கிறார்கள். நம் சமூகத்தில் நம்மோடு தான் முகமூடியோடு இருக்கிறார்கள்.

பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடுவது மட்டுமல்ல... தினம் ஒரு தேவதை என பெண்களின் புகைப்படத்தைப் போட்டு ‘காலை வணக்கம்’ சொல்வது கூட பெண்களுக்கு எதிரான வன்முறை தான்.

கனிவான காலை வணக்கம், மகிழ்வான மாலை வணக்கம் என பதிவிடவும் கூட பெண்களின் புகைப்படம்தான் பலருக்குத் தேவையாக இருக்கிறது.

சிறுவயதில், தெருவில் ஏதேனும் சண்டை நடந்தால், வீட்டுப் பெரியவர்கள் எங்களை உள்ளே போகச் சொல்லி அதட்டுவார்கள்.

அதற்கான ஒரே காரணம், சண்டையின் போது அவர்கள் சிந்துகிற கெட்ட வார்த்தைகளை நாங்கள் கேட்டு விடக்கூடாது என்பது தான். 

எதையெல்லாம் கெட்ட வார்த்தைகள், எங்களுக்குத் தெரியக் கூடாது என நினைத்தார்களோ, அந்த வார்த்தைகள் எல்லாம் முகநூலில் மிக சரளமாக தென்படுகின்றன.

குறிப்பாக பெண்களைத் திட்டுவதற்கு... ‘ஏன் ஆண்களை யாருமே திட்டுவ தில்லையா? ஆண்கள் மீது தாக்குதல் நடப்பதில்லையா?’ என எதிர் கேள்வி வரும். நடக்கிறதுதான். ஆண்கள் மீதான வார்த்தை வன்முறைத் தாக்குதலின் போதும், 

பெண்களைத் திட்டுவதற்கென்றே உள்ள வார்த்தைகளைத் தான் பயன்படுத்துகி றார்கள். இங்கே ஆணைத் திட்டுவதென்பது, அவரின் அம்மா, மனைவி என அவர் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்துவது தான்.

சினிமா பி.ஆர்.ஓ. ஒருவர், சினிமா செய்திகள் சம்பந்தப்பட்ட ஒரு குழுவில் என்னை இணைத்திருந்தார். அதில் ஒருவர், ‘நடிகைகள் சம்பந்தப்பட்ட கிசுகிசுக்களை சொல்லுங்க... 

வி ஆர் வெயிட்டிங்’ என பின்னூட்டமிட, அதற்கு ஏகப்பட்ட விருப்பக் குறிகள். அதுபோலவே, ஒரு பெண்ணுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட அவளின் குளியல் வீடியோ வாட்ஸ் அப்பில் வந்தால், 

எந்த உறுத்தலுமின்றி பலருக்கும் ஃபார்வர்டு செய்கிறோம். அறிவியல் கண்டுபிடிப்புகளை நம் முன்னேற்றத்துக்கு என நாம் பயன்படுத்துவதே இல்லை.

முகநூலில் மிகத் தீர்க்கமாக சமூக பிரச்னைகள் சார்ந்து பதிவிடுகிற பெண்கள் பலரும், நாளடைவில் தங்களின் எல்லாப் பதிவுகளையும் நண்பர்கள் மட்டுமே பார்க்கும் படி மாற்றி விடுவதை அவதானிக்கிறேன். 

எவ்வளவு மன உறுதி கொண்ட பெண்ணையும் நிலைகுலைய வைக்கும் பின்னூட்டக் கேலி கிண்டல்கள் முகநூலில் மலிந்து கிடக்கின்றன.

பயன் பயக்கும் விவாதமாக இல்லாமல், பெரும்பாலும் தாக்குதல் கணைகளாகவே பின்னூட்டங்கள் வருகின்றன. இதனால், ஆரம்பத்தில் துணிச்சலாக விவாதங்களை எதிர்கொண்டாலும், நாளடைவில் ‘நமக்கேன் வம்பு’ என தங்கள் வட்டத்தை சுருக்கிக் கொண்டு விடுகின்றனர் பெண்கள்.

உண்மையில் முகநூல் என்பது மிகப்பெரிய அறிவியல் வரம். முகநூலில் பரவலாக பகிரப்பட்ட என் பேச்சுகள்தான் அமெரிக்கா, கனடா, குவைத், சிங்கப்பூர், உகாண்டா, ஜாம்பியா என 

உலகின் பல நாடுகளுக்கும் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துச் சென்றன. திரைப் பாடல் எழுதும் வாய்ப்பு கூட முகநூல் மூலமே கிடைத்தது.

இங்கே ‘நான்’ என்பது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இப்படி எத்தனையோ பேரின் வளர்ச்சிக்கு உதவும் முகநூலை நாம்தான் சரியாகக் கையாள்வதில்லை. 

எகிப்து தேசத்தில் 30 ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்து வந்தவன் ஹாஸ்னி முபாரக் என்ற கொடுங்கோலன். சையத் காலித் என்கிற இளைஞன் இப்படி ஒரு அடிமை தேசத்தில் வாழ்வதை விட, சாவதே மேல் என தற்கொலை செய்து கொண்டான். 

அந்த மரணம் ஏற்படுத்திய அதிர்வால், அஸ்மா மகபூஸ் என்ற 23 வயது பெண், ‘ஹாஸ்னி முபாரக்கை எதிர்த்து போராடுவோம் நண்பர்களே’ என முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டாள்.

அன்றைக்கு தேதி 2011 ஜனவரி 25. அதை யாருமே கண்டு கொள்ளவில்லை. சில விருப்பக் குறிகள் வந்தன. அவ்வளவே... (லைக், ஃபாலோயர்ஸை வைத்து யாரையும் மதிப்பிடாதீர்கள். ஹிட்லருக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் இருந்தனர். 

இயேசுவுக்கு 12 ஃபாலோயர்ஸ் மட்டுமே என படித்தது நினைவுக்கு வருகிறது). ஆனாலும், மனம் தளராத அஸ்மா மகபூஸ் எகிப்தின் விடுதலை குறித்து தொடர்ந்து முகநூலில் பதிவிட்டாள்.

‘நாளை தஹ்ரீர் சதுக்கத்துக்கு வாருங்கள் இளைஞர்களே... முபாரக்கை எதிர்த்துப் போராடுவோம்’ என அவள் பதிவிட்டது 2011 பிப்ரவரி 11. மறுநாள் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய கூட்டத்தைப் பார்த்து பயந்து போன ஹாஸ்னி முபாரக், 

எகிப்து தேசத்தை விட்டே ஓடிப் போனான். ஒரு இளம்பெண், வெறும் பதினெட்டே நாளில், ஒரு நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தது முகநூலால் மட்டுமே.

‘தஹ்ரீர் சதுக்கத்துக்கு வாருங்கள் இளைஞர்களே’ என அவள் பதிவிட்ட போது, ‘நீ கூப்பிட்டா வரணுமா... நீ பெரிய ஆளா...’ என்றெல்லாம் அவளை ஏளனம் செய்திருந்தால், மனம் துவண்டு போயிருப்பாள்.

அவளுக்கு முகநூலில் கிடைத்த ஆதரவு தான் எகிப்து விடுதலைக்குக் காரணம். சமூக வலைத்தளங்களின் சக்தி அத்தகையது!

அந்த முகநூலை பெண்களை ஆபாசமாக சித்தரிக்கவும், நடிகைகள் குறித்த கிசுகிசு பகிர்தலுக்கும், சாதி சண்டையை வளர்க்கவும், சினிமா நடிகர்களுக்காக அடித்துக் கொள்ளவுமே பயன்படுத்துகிறோம். 

முன்பெல்லாம் நான் மேடையில் பேசி விட்டு இறங்கும் போது, பலரும் ஆட்டோகிராப் வாங்குவார்கள். இப்போதெல்லாம் செல்ஃபி தான். நிகழ்ச்சிக்காக செல்கையில், புகைப்படம் எடுக்க விரும்பி பலரும் சூழ்ந்து கொள்கின்றனர்.

அந்த புகைப்படங்களை முகநூல் புரொஃபைலாகவும் வைக்கின்றனர். ‘என் தோழி’ என்கிற கேப்ஷன் வேறு. உண்மையில் அவர்களெல்லாம் யார் என்று கூட எனக்குத் தெரியாது!

இதெல்லாம் அநாகரிகம் என எப்போது புரிந்து கொள்வார்கள்? என் மிக நெருங்கிய தோழியின் புகைப்படம் ஓர் ஆபாசப் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. ‘வீட்டுக்குத் தெரிஞ்சா அவ்ளோ தான், நான் சாகுறதைத் தவிர வேற வழியில்லை’ என அழுதாள்.

எவனோ ஒருவன் செய்த தவறுக்கு இவள் ஏன் சாக வேண்டும்? இதற்கு தற்கொலைதான் தீர்வு என அவள், அவளைப் போன்ற பெண்கள் நினைக்கக் காரணம், ‘எல்லாரும் தப்பா பேசுவாங்களே’ என்பது மட்டும்தான்... 

கண் முன்னே ஒரு கொலை நடந்தால் கூட, அடுத்த ரயிலில் போவதற்கும் அவகாசமின்றி, உடனே ரயில் ஏறி தங்கள் வேலையைப் பார்க்கப் போகிற அவசர கதியில் இருப்பவர்களுக்கு, நம்மைப் பற்றி பேசிச் சிரிக்கவா நேரம் இருக்கப் போகிறது?

‘முகநூலில் இதுபோன்ற இன்னல்கள் இருக்கத்தான் செய்யும்... ஒரு பெண்ணுக்குத் தெரியாமல், அவள் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடுபவர்கள் தான் வெட்கப்பட வேண்டுமே தவிர,

நாம் அல்ல. மனதிடத்தோடு இப்பிரச்னையை எதிர் கொள்ளுங்கள்’ என சமீபகாலமாக மகளிர் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பேச செல்கையில் மிகத் தீவிரமாகப் பேசி வருகிறேன்.

நம் பெண்பிள்ளைகளிடம் முகநூலைக் கையாள்தல் குறித்து வழி காட்டலோடும் மனம் விட்டும் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

அதே வேளை நம் மகன்களிடமும், சகோதரன்களிடமும், தந்தையிடமுமே கூட, சமூக வலைத்தளங்களில் குறைந்தபட்ச அறத்துடனாவது செயல்பட அறிவுறுத்துவதும் மிக அவசியம்.

அப்போது தான் சமூக வலைத்தளங்கள், கொலைத்தளங்களாக மாறுவதைத் தடுக்க முடியும். முகநூலில் இது போன்ற இன்னல்கள் இருக்கத்தான் செய்யும்... ஒரு பெண்ணுக்குத் தெரியாமல்,

அவள் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடுபவர்கள் தான் வெட்கப்பட வேண்டுமே தவிர, நாம் அல்ல. மனதிடத்தோடு இப்பிரச்னையை எதிர் கொள்ளுங்கள்.
Tags:
Privacy and cookie settings