மைக் மூஸ் - John Mike Muuss !

20-11-2000 அன்று அமெரிக்காவில் ஒரு சாலை விபத்தில் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதிக் கொண்டன. 
தன் வீட்டுக்கருகே உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தி விட்டு வந்த மைக் மூஸ் அந்த விபத்தில் பலியானார். 

மொத்த கணிப் பொறியியல் துறையும், அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சகமும் துக்கம் அனுசரித்தது மைக் மூஸின் மறைவுக்காக. ஏன்? 

யார் இந்த மைக் மூஸ்?.. நட்டநடு பசிபிக் கடலில் ஒரு சின்ன படகில் ஒருவரை கண்ணைக் கட்டி கொண்டு போய் விட்டால் தலைகால் புரியாம சிலிர்ப்பா ஒரு அனுபவம் கிடைக்கும். 

கிட்டத்தட்ட அந்த அனுபவத்தை அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான் வலையமைப்பு வல்லுநர்கள். 

நூற்றுக் கணக்கிலோ அல்லது ஆயிரக்கணக்கிலோ கணினிகள் கொண்ட வலையமைப்பில் ஒரு கணினி மட்டும் கண்ணடிக்குது என்று புகார் வரும் சமயம், 

அதனை சோதனை செய்யச் செல்லும் வல்லுநர் திரையரங்கில் மொக்கைப்பாடல் வரும் போது புண்பட்ட மனதை ஆற்ற மக்கள் தன்னிச்சையாகக் வெளிக்கிளம்புவதைப் போல, 

கொஞ்சம் கூட யோசிக்காமல் உபயோகப்படுத்தும் முதல் ஆயுதம் 'பிங்' (ping). உலகில் பிங் நிரல் இல்லாத கணினிகளே இல்லை. 

முதல் காரணம் அதன் அற்புதமான பயன், இரண்டாவது காரணம் 'இலவசம்' :D. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிங் எப்படி செயல்படுது, செயல்படும் நேரத்தில் என்னென்ன நடக்கிறது, 

அவற்றின் பயன்கள் என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
வலையமைப்புக்கான தொடர்பு வழிமுறைகளின் (TCP/IP - Transmission control protocol/Internet protocol) 

ஒரு அங்கமான ICMP - internet control message protocol என்பதனைப் பயன்படுத்தி ஒரே வலையமைப்பில் உள்ள இரண்டு கணினிகள் ' நீ இருக்கியா' (echo_request), 'இருக்கேன், 

ரைட்டு' (echo_response) என்று தங்களது இருப்பை உறுதிப் படுத்திக் கொள்ளும் நிகழ்வு தான் பிங். பிங் கட்டளையமைப்பு கீழ்காணும்படி இருக்க வேண்டும். 

எங்கிருந்து பிங் கட்டளை பிறப்பிக்கப் படுகிறதோ அங்கிருந்து சேருமிடத்திற்குச் சிறு தகவல்பகுதிகள (data packets) ICMP வழிமுறைப்படி அனுப்படும். 

அத்தகவல் பகுதியின் தலைப்பகுதியில் தகவல் புறப்படுமிடம் மற்றும் சேருமிடத்தின் வலையமைப்பு முகவர் எண்கள் பதிவு செய்யப் பட்டிருக்கும். 

கட்டளையில் உள்ளிடப்பட்ட முகவர் எண்ணுக்கான இடத்தை அடைந்ததும், தகவல் பகுதி திருப்பி புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் நான்கு முறை திருப்பி அனுப்பி வைக்கப்படும். 

இவை அனைத்தும் 128 மில்லி வினாடிகளுக்குள் நடந்து முடிந்தால் தகவல் தொடர்பு சரியாக இருக்கிறதென்று அர்த்தம். 

கால தாமதத்தால் 128 மில்லி வினாடிகளைத் தாண்டி காலாவதியானால் (time to live - TTL=128) கணினிகளுக் கிடையே வலையமைப்புக் 

கட்டமைபுக்கான உள்ளிடல்களிலோ
அல்லது Firewall காரணமாகவோ சிக்கல் இருக்கலாம். 

அல்லது சேருமிடத்திற்குரிய வலையமைப்பு முகவர் எண்ணைக் காணவில்லை என்று தகவல் தந்தால் வேறு வழியில்லை, 

இடுப்பை வளைத்து, குனிந்து கணினி மேஜைக்கடியில் புகுந்து வலையமைப்புக்கான இணைப்பு கழண்டிருகிறதா 

அல்லது வலையமைப்பு வடத்தில் பிரச்சினையா என்று சட்டை கசங்கினாலும் கவலைப்படாமல் பார்த்துத் தான் ஆக வேண்டும். 

மேற்சொன்ன உதாரணம் ஒரு பொதுப்பயன். இவை தவிர பிங் மூலம் உங்கள் கணினிக்கும் ஒரு இணைய தளத்திற்க்கோ 

அல்லது வலையமைப்பில் உள்ள மற்றொரு கணினிக்கோ இடையே உள்ள வலையமைப்புத் தூரம் எவ்வளவு என்பதை கணக்கிடவும், 

இணைய தளத்தின் முகவரிக்குரிய முகவர் எண்ணைத் தெரிந்து கொள்ளலாம். 

இப்படி விவரிக்கும் போதே தலைவலிக்க வைக்கும் செயல்களை மிகச் சுலபமாக செய்து முடிக்கும் 'பிங்', ஒவ்வொரு நொடியிலும் உலகில் எதோ ஒரு இடத்தில் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. 

இவ்வளவு பெருமைகளையும், ஆயிரத்திற்கு மதிகமான வரிகளால் அமைக்கப்பட்ட மூலக்கூறு நிரலையும் உடைய 'பிங்' கட்டளை 

ஒரு பொன் மாலைப் பொழுதில்
அவசரத் தேவைக்காக சில மணி நேரத்தில், தனி மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டிய தகவல். 

அத்தகைய அதிவேக செயல்திறன் கொண்ட மூளைக்குச் சொந்தக்காரர் தான் மைக் மூஸ் (மைக்கேல் ஜான் மூஸ்). 

ஒரு மனிதன் தன் தாய்மொழியைப் பேசுவதற்கு ஈடான வேகத்தில் நிரல்களை எழுதும் சூரப்புலி என்று தன் சக விஞ்ஞானிகளால் புகழப்பட்ட மைக் மூஸ் அடிப்படையில் ஒரு மின் பொறியாளர்.
மைக் மூஸ் இணையத்துக்கும், கணினித் தொழில்நுட்பத்துக்கும் படைத்த ஒரு பானைப் படைப்புகளில் ஒரு சோறு தான் இந்த பிங். 

பிங் இவ்வளவு பிரபலமடையும் என்று தெரிந்திருந்தால் உருவாக்கத்தில் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் செலவழித்திருப்பேன் என்று பின்னாளில் கூறிய மைக் மூஸ்,

USENIX அமைப்பின் 1993 ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பாராட்டு விழாக்கள் ஏதுமின்றி :D மொத்தம் 26 விருதுகள் அளித்துக் கவுரவிக்கப் பட்டவர். 

அமெரிக்கப் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வந்த மைக் மூஸ் பாதுகாப்புத் துறைக்காக 

உலகின் முதல் முப்பரிமாண வடிவமைப்பு மென்பொருளைக் கட்டமைத்தவர் (BRL-CAD - ballistic reaseach laboratory, computer aided design). தான் வாழும் காலத்தில் 
என்னென்ன சாதிக்க வேண்டும் என்று கல்லூரி நாட்களிலேயே பட்டியலிட்டு வைத்திருந்த மைக் மூஸ், தன் 42வது வயதிலேயே கிட்டத்தட்ட அப்பட்டியலை முடிக்கும் தருவாய்க்கு வந்து விட்டார். 

நண்பர்கள் அவரைக் கடைசியாக சந்தித்த தருணத்தில் தனது அடுத்த பட்டியலைத் தயார் செய்து கொண்டிருந்தார் மைக் மூஸ். 

பட்டியல் மட்டுமே இருக்கிறது. வலையமைப்பில் யாரைத் தேடினாலும் பார்த்துச் சொல்லும் பிங், "ping mike muuss" என்று கேட்டால் தரும் பதில் "ping request could not find host mike muuss".
Tags:
Privacy and cookie settings