ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்றார் ஜெயலலிதா.இருக்க முடியும் என்றார் ம.நடராசன்.
ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்கவே முடியாது என்று மீண்டும் சொன்னார் ஜெயலலிதா. இருக்க முடியும்.
என்பதற்கு உதாரணம் உங்களிடமே இருக்கிறதே என்று போயஸ் கார்டனுக்கு உள்ளேயே கலைப் பொருள்கள்
வரிசையில் இருந்த ஒன்றை எடுத்து வந்தார் நடராசன். ஜெயலலிதா நடிகையாக இருந்த காலத்தில் தரப்பட்ட பொருள்களில் அதுவும் ஒன்று.
அந்த உறையின் பக்க வாட்டில் இருக்கும் க்ளிப்பை லாகவமாக நகர்த் தினால், இரண்டு பக்கங்களில் இருந்தும் கத்தி வரும். எடுத்துக் காட்டினார் நடராசன்.
இதோ போயஸ் கார்டனில் ஜெயலலிதா வுக்கே தெரியாமல் இருந்த இரண்டாவது கத்தி, கட்சியையும் ஆட்சி யையும் ஒரே நேரத்தில் கைப்பற்றப் போகிறது.
முதல் கத்தியான ஜெயலலிதா, சென்னை மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்ட போது அவரது உடலோடு சேர்த்து அவரின் கனவுகளும் புதை குழிக்குள் போய் விட்டன.
இரண்டு முறை அவரது நம்பிக் கையைப் பெற்ற ஓ.பன்னீர் செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டு, இரண்டு முறை அவரால் கட்சியை விட்டு (1996, 2011)
நீக்கப்பட்ட சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஆகப் போகிறார்.
பேரறிஞர் அண்ணாவின் ஆசைகளை நிராசை யாக்க கருணா நிதிக்கும், எம்.ஜி.ஆரின் எண்ணங்களைச் சிதைக்க ஜெயலலிதா வுக்கும் சில ஆண்டுகள் தேவைப் பட்டன.
அம்மாவின் கனவுகளைக் கரைக்க, சின்னம்மாவுக்கு இரண்டு மாதங்களே போதும் போலும்.
அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப் பட்டிருப்பது, அந்தக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 1,500 பேரின் விருப்பம்.
அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தமிழ் நாட்டின் முதலமைச் சராக அவரை ஆக்கியிருப்பது, சட்டமன்ற உறுப்பினர்கள் 134 பேரின் விருப்பம்.
அதில் குறுக்குத் தடைபோட, கட்சிக்கு வெளியே இருப்பவர்களுக்கு உரிமை இல்லை என்பது உண்மை தான்.
ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம் தான் லட்சக் கணக்கான அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணமா?
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணம் தான் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்த சுமார் இரண்டு கோடி மக்களின் விருப்பமா?
இவை இரண்டும் மக்கள் மன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை, சசிகலாவின் இரண்டு பதவிகளுமே சர்ச்சைக்கு உரியதாகத் தான் இருக்கும்.
இந்த இரண்டு பதவி களையும் வகிக்க, சசிகலாவுக்கு அந்தத் திறமை இருக்கிறதா... இந்தத் திறமை இருக்கிறதா? என்ற பட்டிமன்றம், தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.
தகுதி, திறமை தனியே இருக்கட்டும். முதலில் அவர் என்ன வகைக் குணம் கொண்ட மனிதர் என்ற புரிதலே இல்லாதது தான் சர்ச்சை களுக்கும் விமர்சனங்க ளுக்கும் அடிப்படைக் காரணம்.
நடராசனை, போயஸ் கார்டனை விட்டே துரத்தினார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார். திவாகரனை உள்ளேயே நுழையக் கூடாது என விரட்டினார் ஜெயலலிதா.
சசிகலா ஏற்றுக் கொண்டார். தினகரனின் பதவிகள் அனைத் தையும் பறித்து, வீட்டுக்குள் முடக்கினார் ஜெயலலிதா.
சசிகலா ஏற்றுக் கொண்டார். வி.என்.சுதாகரன் மீது கஞ்சா வழக்கு போட்டார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார்.விவேகான ந்தனைக் கைது செய்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார்.
டாக்டர் வெங்கடேஷ் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார். நடராசனைக் கைது செய்தார் ஜெயலலிதா.
சசிகலா ஏற்றுக் கொண்டார். திவாகரனைக் கைது செய்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார்.
உறவினர் ராவணனைக் கைது செய்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார்.
என்.சசிகலா என்று நடராசன் பெயரை முன்னெழுத்தாகப் போடக் கூடாது எனத் தடுத்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார்.
உன் உறவினர்கள் யாரும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் வரக் கூடாது’ எனத் தடுத்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார்.
உறவினர் வீட்டுத் திருமணம் மற்றும் மற்ற நிகழ்ச்சி களுக்குப் போகக் கூடாது எனத் தடுத்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார்.
சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார். மன்னார்குடி குடும்பத்துக்கே துரோகிப் பட்டம் கொடுத்தார் ஜெயலலிதா.
நான் துரோகம் செய்ய மாட்டேன் என எழுதிக் கொடுத்து, அவரது குற்றச் சாட்டை சசிகலா ஏற்றுக் கொண்டார். தலைமைச் செயற்குழு பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார்.
உன்னை மட்டும் உள்ளே சேர்ப்பேன். உன் உறவினர்கள் யாரும் கட்சிக் குள்ளும் கார்டனுக் குள்ளும் வரக் கூடாது’ என்று கட்டளை போட்டார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார்.
உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் ரத்த சொந்தம், பந்த பாசம், ஈவு இரக்கம் அத்தனையும் உறைந்து போகும் அளவிலான துன்பத் துயரங்கள் தனக்கு இழைக்கப்பட்ட போதும்,
ஜெயலலிதா வைப் பற்றெனப் பற்றி நின்ற சசிகலாவை, என்ன வென்று புரிந்து கொள்வது?
தமிழ்நாடு எத்தகைய மனோபாவம் உள்ளவர் கைக்குப் போகப் போகிறது என்ற பதற்றம் இதனாலேயே ஏற்படுகிறது.
மற்றபடி யார் காலில் யார் விழுந்தால் நமக்கு என்ன, எந்த வீட்டுக்குப் புது சித்தி வந்தால் நமக்கு என்ன?
இந்த வீட்டுக்குள் தனியாக நுழைந்து, பெரும் கூட்டமாக தனது உறவுகளை இழுத்து வந்து அரண் அமைத்து,
அந்த உறவுகள் அனைத்தையும் ஜெயலலிதா வெட்டி விட்ட பிறகும், அதே வீட்டுக்குள் காத்திருந்தார் சசிகலா; காத்திருக்கச் சொன்னார் நடராசன்.
ஆளுநர் சென்னா ரெட்டி காலத்திலேயே நடராசனுக்கு சிம்மாசனம் கிடைத்திருக்கும். அ.தி.மு.க-வை நடராசனைக் கைப்பற்றச் சொல்லுங்கள்.
நான் உதவி செய்வேன்’ என்று திருச்சி வேலுச்சாமியிடம் ஆளுநர் சென்னா ரெட்டி சொல்லி அனுப்ப, `
முதலமைச்சர் நாற் காலியைப் பிடிப்பது பெரிய விஷயம் தான். நான் துரோகியாகி அதைப் பிடிக்க விரும்ப வில்லை என்று நடராசன் அப்போது சொன்னார்.
நடராசன் விரும்பியிருந்தால், கட்சியை அன்று உடைத்தி ருக்கலாம். ஆனால், இப்போது போல் சுளையாகக் கிடைத் திருக்காது. காரியக் காரராகக் காத்திருக்கச் சொன்னார்.
இன்று கைமேல் பலன் கிடைத்துள்ளது. சசிகலாவும் நடராசனும் தனக்கு எப்போதாவது சிக்கலை ஏற்படுத்துவார்கள் என்று ஜெயலலிதாவுக்கும் தெரியும்.
அதனால் தான் சசிகலாவை இரண்டு முறை கட்சியை விட்டு நீக்கினார். தனக்கு எதிராகச் சதி செய்த சந்தேகத்தின் அடிப்படையில் தான் இரண்டு முறையும் கட்சியை விட்டு நீக்கினார்.
1996-ம் ஆண்டில் டெல்லியில் சதி நடந்ததாகவும், 2011-ம் ஆண்டில் பெங்களூரில் சதி நடந்ததாகவும் ஜெயலலிதா சந்தேகப்பட்டார்.
ஒரு சில தனிநபர்களை விட கட்சியின் நலனும் எதிர் காலமுமே முக்கியம் என்று நான் கருதுகிறேன்.
கட்சியா... சசிகலாவா என்ற கேள்விக்குக் கட்சியே முக்கியம் என்று சொல்லி, சசிகலாவை முதல் முறை நீக்கினார் ஜெயலலிதா.
அப்போது இந்தியா டுடே வுக்கு அளித்த பேட்டியில், எனக்கு இருந்த ஒரே தோழி சசிகலா மட்டும் தான்.
தனிமையில் வாழும் பெண்ணான எனக்கு, வயதான காலத்திலே என்னைக் கவனித்துக் கொள்ள யாராவது தேவை என்று நினைத்தேன்.
வளர்ப்பு மகன் ஐடியா கூட இது போன்ற சிந்தனையின் அடிப்படையில் வந்தது தான். ரொம்ப யோசிக்காமல் திடீரென்று எடுத்த முடிவு அது.
அந்தக் கல்யாணம் ஒன்று தான் என் வாழ்க்கையிலேயே நான் செய்த பெரிய தவறு.
சசிகலாவின் ஒரு சில நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் நடந்து கொண்ட விதம் வாக்கா ளர்களைப் பாதித்து விட்டது.
என்னைப் பொறுத்த வரை சசிகலா சூழ்நிலைக்குப் பலியாகி விட்டார் என்று தான் சொல்வேன்.
பேராசை பிடித்த உறவினர்கள், பாரபட்சமான பத்திரிகைகள் மத்தியில் சிக்கித் தவித்த சசிகலா, இன்றைக்குப் பரிதாபமாக ப.சிதம்பரத்தின் கைகளில் சிக்கியிருக்கிறார்.
அவரை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்’ (1996 அக்டோபர் 6-20 இதழ்) என்று பட்ட வர்த்தனமாகச் சொன்னார்.
இரண்டாவது முறை நீக்கும் போது கோபத்தின் உச்சிக்கே போனார் ஜெயலலிதா.
துரோகம் செய்து விட்டு இந்தக் கட்சியில் இடம் இல்லை என்று நீக்கிய பிறகும், கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பி டியாகத் தொடர்பு கொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே வந்து விடுவோம்.
மீண்டும் செல்வாக் குடன் இருப்போம். இப்போது எங்களைப் பகைத்துக் கொண்டால், நாளை மீண்டும் வந்து பழி வாங்குவோம்.
அதனால் எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். கட்சித் தலைமையின் மீதே சந்தேகம் வரும் அளவுக்குப் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.
அது மட்டும் அல்ல, அத்தகையவர்களுடைய பேச்சை நம்பி அதன்படி செயல்படும் கட்சிக் காரர்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று
சசிகலா வையும் அவரின் உறவுகளையும் நீக்கிய பிறகு (டிசம்பர்-2011), பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசினார்.
அதே சசிகலாவைத் தான் பொதுச் செயலாளராக, முதலமைச்சராக அந்தக் கட்சி இப்போது முன்மொழிந்துள்ளது.
அவரின் மன்னார்குடி உறவுகளே இன்று அம்மாவின் மாண்பைக் காப்பாற்ற, போயஸ் கார்டனில் கூடியிருக்கிறார்கள்.
எனக்கு எல்லாமே அம்மாதான். அம்மாவுக்கு எல்லாமே நான் தான்’ என்று சசிகலா சொல்கிறார். `நாங்கள் இல்லா விட்டால் ஜெயலலிதா இல்லை.
எங்களைத் தான் உடன் வைத்திருந்தார். அவருக்கு எங்களை விட்டால் வேறு சொந்தங்கள் இல்லை என்று சசிகலாவின் உறவுகள் சொல்லி,
இந்தப் பதவிக்குத் தாங்களே தகுதி வாய்ந்தவர்கள் என்று நற்சாட்சிப் பத்திரம் கொடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த வாதங்களை ஜெயலலிதா, தான் உயிர் வாழ்ந்த காலத்தில் ஒப்புக் கொள்ள வில்லை என்பதே உண்மை.
பெங்களூரில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா வின் வழக்குரைஞர் பி.குமார், 11 நாள்கள் தனது வாதங்களை முன் வைத்தார்.
அப்போது, ‘ஜெயலலிதாவுக்கு... சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் உறவுகளும் அல்ல.
சுதாகரன் வளர்ப்பு மகனும் அல்ல. அவரது திருமணச் செலவை ஜெயலலிதா செய்யவும் இல்லை’ என்று சொன்னார்.
இதைவிட ஒரு படி மேலே போய் சசிகலாவின் வழக்குரைஞர் மணிசங்கர், `1991-ம் ஆண்டுக்கு முன்பே ஜெயலலிதா வுக்கும் சசிகலாவுக்கும் பழக்கம் இருந்தது.
இருவரும் பிசினஸ் பார்ட்னர்கள். அவ்வளவு தான். அதற்காக ஜெயலலிதா, சசிகலாவுக்குப் பணம் கொடுக்கவும் இல்லை; சசிகலா, ஜெயலலிதாவிடம் பணம் வாங்கவும் இல்லை' என்று வாதிட்டார்.
உறவினர் அல்ல என்பது ஜெயலலிதாவின் வாதம். பிசினஸ் பார்ட்னர்கள் என்பது சசிகலாவின் வாதம். ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் வரிசையில்
அ.தி.மு.க-வையும் ஒரு கம்பெனியாக நினைப் பதால், சக பார்ட்னர் என்ற அடிப்படையில் சசிகலா கைக்கு இப்போது அதிகாரம் வந்து சேர்ந்து விட்டது.
வேறு பங்காளிகள் யாரும் இல்லை. பார்ட்னர் என்பதால், தனது தவறு களுக்கு மட்டும் அல்ல ஜெயலலிதாவுக்கும் சேர்த்துப் பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியம் சசிகலா வுக்கு இருக்கிறது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த
பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தின் தீர்ப்பின் மேல்முறையீடு உச்ச நீதிமன் றத்தில் இருக்கிறது.
அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்ட மறுநாளான பிப்ரவரி 6-ம் தேதி,
இன்னும் ஒரு வாரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப் படும்' என்று நீதிபதிகள் அறிவித்து ள்ளார்கள்.
சசிகலாவின் தலைக்கு மேல் மூன்றாவது கத்தி டெல்லியில் இருந்து தொங்கிக் கொண்டிரு க்கிறது.
நேர்மையில் நடத்தையில் வழுக்கல் இருக்கு மானால், ஒரே உறையில் மூன்றாவது கத்தியும் இருக்கும் என்பதை நடைமுறை யதார்த்தம் மெய்ப்பி க்கிறது.
ஜெயலலிதா பதவி பறிக்கப் பட்டது. பன்னீர் வந்தார். ஜெயலலிதா பதவி விலகினார். பன்னீர் வந்தார். ஜெயலலிதா மறைந்தார். பன்னீர் வந்தார். இப்போது பன்னீர் பதவி விலகி இருக்கிறார்.
சசிகலா வர உள்ளார். இதுவரை ஜெயலலிதாவின் துரதிர்ஷ்டமும் பன்னீரின் அதிர்ஷ்டமும் பார்த்தோம். இப்போது பன்னீரின் துரதிர்ஷ்டமும் சசிகலாவின் அதிர்ஷ்டமும் பார்க்கிறோம்.
நாளை அந்த இரண்டு தனி மனிதர்களுக்கும் எதுவும் நடக்கலாம். ஆனால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு? இப்படி அமையும் அரசாங்கம், அரசியலுக்குத் தப்பான பஞ்சாங்கம்.
இது காதல் ஸ்பெஷல். மனைவி சசிகலாவுக்கு புதுப்புது சேலைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் நடராசன்.
போயஸ் வீடு மட்டும் அல்ல, நாடும் வாங்கித் தந்து விட்டார். அவர்களுக்கு இது ஒரு கொண்டாட்டம். ஆனால்... மக்களுக்கு?