பணிவுக்கு கூகுளில் அர்த்தம் தேடினால், பன்னீர் என்று தான் இருக்கும் என்றுகூடச் சொல்வார்கள். ஆனால் இப்போது அதிரடிக்கு பன்னீர் என்று சொல்லுமளவுக்கு மாறி விட்டார்.
பன்னீர் பேசுகிறார். சிரிக்கிறார். கோபப்படுகிறார். இது எதையும் சசிகலா எதிர் பார்க்கவில்லை. அவரால் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை.
ஒரு நாளில் வரவில்லை இந்த மாற்றங்கள். பன்னீர் உள்ளத்துக்குள் இருந்த குமுறல் தான் இப்போது வெடித்துக் கிளம்பி யிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, திருச்சியில் நடந்த ராமஜெயம் மகள் திருமண விழாவுக்குப் போயிருந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
அப்போது விமான நிலையத்தில் அவர் தனக்கு நெருக்க மானவர்களிடம், விரைவில் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆட்சி நீடிக்காது என்று சொல்லியிருக்கிறார்.
ஆக, அடுத்த நாள் இரவு பன்னீர் பேசப் போகிறார், ஜெயலலிதா சமாதியில் போய் உட்காரப் போகிறார் என்பதெல்லாம் முதல் நாளே ஸ்டாலினுக்குத் தெரியும் என்கிறார்கள்.
எது சொன்னாலும் அமைதியாகவே இருக்கும் பன்னீரை இந்தளவுக்கு மாற்றக் காரணம்… அவமானம்! சசிகலா மட்டுமல்லாமல் அவரது சொந்தங்களும் பன்னீரை பல இடங்களில் அவமானப் படுத்தினார்கள்.
பன்னீர் அமைச்சரவையில் இருந்து கொண்டே, சசிகலா முதல்வராக வேண்டும் என பேட்டி கொடுத்தார் அமைச்சர் உதயகுமார். அவரைத் தொடர்ந்து,
எல்லா அமைச்சர்களுமே சின்னம்மா தான் தமிழகத்தை வழிநடத்த வேண்டும். அவர் முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என சொல்ல வைக்கப் பட்டார்கள்.
சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் சொல்ல வேண்டிய பதில்களை அமைச்சர்களே எழுந்து சொன்னார்கள்.
சபாநாயகர் முதல்வர் பதில் சொல்லட்டும் நீங்கள் உட்காருங்கள் என்று அமைச்சர்களிடம் சொன்னார்.
அவர்களோ அதை அலட்சியப் படுத்தினார்கள். எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு முன்பாக தான் அவமானப்பட்டதை குடும்பத்தாரிடம் சொல்லிச் சொல்லி புளுங்கி யிருக்கிறார் பன்னீர்.
இந்த நேரத்தில் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டு ராஜினாமா கடிதத்தையும் வாங்கிக் கொண்டார்கள். அதன்பிறகு, பன்னீருக்கான மரியாதை சுத்தமாக இல்லாமல் போனது.
ஏதோ கட்சியில் உள்ள ஒரு அடிமட்ட நிர்வாகியைப் போல அவரை நடத்த ஆரம்பித்தார்கள். சசிகலா அமைச்சரவையில் பன்னீருக்கு இடம் இல்லை என்பதும் உறுதியானது.
பேருக்காக அவரை சபாநாயகர் ஆக்கி விடலாம் என சசிகலா போட்ட திட்டங்கள் பன்னீருக்கும் தெரிய வந்தது.
முதல்வராக இருந்துவிட்டு, இனியும் இதுபோல அவமானங்களை பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டுமா என பன்னீர் யோசிக்க ஆரம்பித்தார்.
இந்த நேரத்தில் பன்னீர் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவருடன் ஆலோசனை செய்திருக்கிறார்.
அந்த நிர்வாகி பன்னீருக்கு சில ஆலோசனைகளைச் சொல்லி யிருக்கிறார். இந்த நேரத்தில் நீங்க வெளியில் வந்தால், உங்களுக்கு ஆதரவு பெருகும்.
சசிகலா முதல்வராக பதவியேற்க போதுமான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லாமல் போகும். அதனால் பதவியேற்க முடியாது. ஆட்சி மாற்றம் வரும். சசிகலாமீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.
அந்த ஆதரவெல்லாம் உங்கள் பக்கம் திரும்பும். ஏற்கனவே தீபாவுக்கு ஒரு கூட்டம் கூடியிருக்கிறது. தீபாவிடமும் பேசி அவரை உங்கள் பக்கம் கொண்டு வாங்க. அப்புறம் நீங்கதான் அதிமுக என்று சொன்னாராம்.
அதன் படி தான் பன்னீர் துணிச்சலாக இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று சொல்கிறார்கள்.