ஏன் இந்த தமிழக மக்கள் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள்? சசிகலாவை ஆயம்மா, வேலைக்காரி என கிண்டல் செய்வதை விட ஒரு அரசியல் குருட்டுத்தனம் இருக்க முடியுமா?
எந்த ஆயம்மா சாராய ஆலை வைத்திருக்கிறார்? எந்த வேலைக்காரி ஜாஸ் தியேட்டர் வாங்கி யிருக்கிறார்? எந்த பாத்திரம் விலக்குகின்றவரால் பையனூர் பங்களாவை பிடுங்க முடியுமா?
இப்போது கங்கை அமரன் தனது பையனூர் பங்களாவை சசிதான் பிடிங்கினார் என பேட்டி கொடுக்கிறாரே, பையனூர் பங்களா பிடுங்கப்பட்ட போது ஜெ தானே முதல்வர்?
அப்போதே பிரஸ்மீட் வைத்து அந்த பிடுங்கலில் சம்பந்தமே இல்லாத ஜெவிடம் நியாயம் கேட்க வேண்டியதானே? முடியாது! ஏனெனில் பிடுங்கியது ஜெ-சசி என இருவருமாக சேர்ந்துதான்.
பாலு ஜுவல்லர்சில் இருந்து ஜாஸ் தியேட்டர் வரை இருவரும் பார்ட்னர்ஸ் இன் க்ரைம் என்பதுதான் உண்மை. இதில் எங்கே ஜெ முதலாளியானார், சசி வேலைக்காரி ஆனார்? கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா?
உண்மையில் இந்த இரு முதலாளிகளுக்கும் வேலைக் காரர்களாக இருந்தது பதவிக்காக டயர் வரை கூழைக் கும்பிடு போட்டு, காலால் இட்ட பணியை தலையால் செய்து முடித்த ஓ.பி.எஸ் போன்றவர்கள் தான்.
ஜெ செத்து இத்தனை நாட்கள் ஆனபின் அவருக்கு ஞானம் வருகிறதாம். தனது முதல்வர் பதவி பிடுங்கப் பட்டவுடன், சசிக்கு மக்களிடையே எதிர்ப்பு உள்ளது என நன்றாக தெரிந்தவுடன் இவரிடம் ஜெ ஆன்மா பேசுகிறதாம், உந்துகிறதாம்,
உருளுதாம், உடையுதாம்! இன்னும் தெளிவாகச் சொன்னப் போனால் தன் இரு முதலாளி களில் பலமான முதலாளியின் இடம் காணாமல் போனவுடன் சொத்தை ஆட்டையைப் போட நினைக்கும் வேலையாளின் சுயநலன் தான்
ஓ.பி.எஸ்ஸுக்கு இருக்கிறதே தவிர, அதில் கட்சி நலன், அரசு நலன், மக்கள் நலன் இருக்கிறது என நினைப்பது மகா அரசியல் அறிவீனம்.
நாம் எதிர்பார்க்க வேண்டியதும், கேட்க வேண்டியதும், குரல் எழுப்ப வேண்டியதும் சசியா, ஓ.பி.எஸ்சா என்பதற்காக அல்ல. மாவை இட்லியாக சுட்டால் என்ன தோசையாக சுட்டால் என்ன? நாம் கேட்க வேண்டியதும்,
குரல் எழுப்ப வேண்டியதும் பொதுத் தேர்தல் மட்டும்தான். திவாலை நோக்கி வேகமாகச் சென்று கொண்டி ருக்கும் தமிழக அரசை அது மட்டுமே காப்பாற் றும்- டான் அசோக்