நாமெல்லோருமே, பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் மதிப்புகளுக்கும் ஆசைப் பட்டவர்களாகவே இருக்கிறோம். தாங்கள் அவ்வாறில்லை என்று சொல்பவர்கள் கூட, உண்மையில் அவற்றுக்கு ஆசைப் பட்டவர்களே.
ஆனால், பதவிகளோ அல்லது பட்டங்களோ, உங்களுக்குரிய அடையாளங்கள் என எண்ணிக் கொள்ளாதீர்கள். நீங்கள் யாரென்ற அடையாளம், உங்களுடைய திறமையாலும் உங்களுடைய நற்பண்புகளாலும் மாத்திரமே உருவாக்கப்பட வேண்டும்.
உங்களை விட உயர்ந்த பதவியைக் கொண்டோரைப் பார்த்துப் பொறாமை யடையாதீர்கள், குறைந்த பதவியைக் கொண்டோரைப் பார்த்து இழிவாக எண்ணாதீர்கள்.
அதேபோல், உங்களை விடத் தகுதி குறைந்த ஒருவருக்கு, உங்களை விட உயர்ந்த பதவி வழங்கப்பட்டிருக்கிறது என்று எண்ணுவீர்களெனில், அவருடன் முரண்படாதீர்கள், அவரை எதிரியாக எண்ணாதீர்கள்.
உங்களுக்கென ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள், காலப்போக்கில், உங்களின் பெறுமதியையும் அவசியத்தையும் உணர்ந்து கொள்வார்கள்.
பெரிய கோடொன்றைச் சிறியதாக்குவதற்கு, அந்தக் கோட்டை அழிப்பதை விட, இன்னொரு பெரிய கோட்டை வரைவது தான் சிறந்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.