காஷ்மீர் மாநிலத்தில் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள பாலாலி கிராமத்தை சேர்ந்த ராக்கி என்ற 87 வயதான மூதாட்டி நாட்டிற்கு ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார். அவர் தனது வீட்டின் அருகே ஒரு கழிவறை கட்டி உள்ளார்.
கிராமத்தின் மாவட்ட நிர்வாகம் குழு ஸ்வச் பாரத் மிஷன் பற்றி பல விழிப்புணர்வு முகாம் களை அறிமுகப் படுத்திய பின் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மூதாட்டி முன்னிலை வகிக்கிறார்.
தானே தனது வீடு அருகே ஒரு கழிவறை கட்டினார். உழைப்பாளர்களை பணியில் அமர்த்துவதற்கு பணம் இல்லாததால் அவரே அங்கு கட்டிட வேலை செய்தார். இது குறித்து ராக்கி கூறியதாவது:-
பலவகை நோய்கள் பரவுவதால் அனைவரும் கழிவறையை உபயோகப் படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் ஏழை மற்றும் ஒரு கழிவறை கட்ட பணம் இல்லை.
எனவே கட்டுமானக் கருவி, மற்றவர்களின் உதவியுமின்றி என் கைகளால் கழிவறை கட்ட முடிவெடுத்தேன். என் மகன் கழிவறை கட்டுவதற்கான மண் கொண்டு வந்தான்.
அதன் பிறகு நான் செங்கற்களை வைத்து, சமன் செய்து கொத்து வேலை செய்தேன். 7 நாட்களுக்குள் என் கழிவறை வேலை முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
தனது கிராமத்தை திறந்த வெளி கழிப்பிடமில்லா கிராமமாக மாற்ற விரும்பும் பாட்டியின் இந்த பணியை உதம்பூர் துணை ஆணையர் பாராட்டி உள்ளார்.