சீனாவில் இருந்து தருவிக்கப்படும் சார்டின் டின் மாதிரியில் மனிதர்களுக்கு அனிசாக்கியாசிஸ் நோயை ஏற்படுத்தும் புழுக்கள் இருந்ததை மலேசிய தடுப்புச் சோதனை சேவைத் துறை (MAQIS) கண்டு பிடித்துள்ளது.
கடந்த மே மாதம் 14-ஆம் தேதி பினாங்கு, நோர்த் பட்டர்வெர்த் கொள்கலன் முனையத்தின் ஊடாக நாட்டுக்குள் வந்திறங்கிய இரு கொள்கலன்களில் உள்ள ‘RANESA’ முத்திரைப் பதித்த சார்டின் டின் மாதிரிகள் சில பரிசோதனை க்கு உட்படுத்தப் பட்டிருந்தன.
அந்த சார்ட்டின் டின்களில், அனிசாக்கியாசிஸ் நோயை ஏற்படுத்தும் அனிசாக்கிஸ் புழுக்கள் இருந்தது பரிசோதனையில் கண்டறியப் பட்டதாக MAQIS தலைமை இயக்குநர் டத்தோ மொக்தா ரூட்டின் ஹூசேன் தெரிவித்தார்.
வழக்கமாக சரியாக சமைக்கப்படாத கடல் உணவு வகைகளில் இருந்து தான் அனிசாக்கியாசிஸ் நோய் பரவும். குறிப்பாக, மீன்களில் இருந்து இந்நோய் பரவக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.
வயிறு, குடல் பகுதிகளை இந்நோய் பாதிக்கும் என்றும், வயிற்று வலி, வாந்தி பேதி, மயக்கம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய உணவுப் பொருட்களை நாட்டுக்குள் தருவிப்பது 2011-ஆம் ஆண்டின் மலேசிய தடுப்புச் சோதனை சேவைச் சட்டத்தின் 14-வது பிரிவின்படி ஒரு குற்ற செயலாகும்.
ஆகையால், நாட்டிலுள்ள 57 நுழை வாயில்களில் இருந்தும் நாட்டுக்குள் தருவிக்கப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை என்பதை MAQIS உறுதிச் செய்யும் என டத்தோ மொக்தா ரூட்டின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments