விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீசார் சித்ரவதை செய்ததாக பண்ருட்டியைச் சேர்ந்த பெண் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்திய மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (30).
திண்டிவனம் போலீசார் தன்னை விசாரணை க்கு அழைத்துச் சென்று நிர்வாணப் படுத்தி
சித்ரவதை செய்ததாக நேற்று முன்தினம் பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சேர்ந்தார்.
இது குறித்து மல்லிகா நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 26ம் தேதி மாலை 4 மணிக்கு திண்டிவனம் போலீசார் மூன்று பேர் வந்து உன் கணவர் திருட்டு வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார்.
உன்னை விசாரிக்க வேண்டும். அதனால் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகம் வரவேண்டும் என கூறினர்.
அப்போது நான் எனது கணவர் எந்த தவறும் செய்ய மாட்டார் என கூறினேன்.
அதற்கு அவர்கள் அவசியம் விழுப்புரம் வரவேண்டும் என்றனர். அதனால் அவர்களுடன் சென்றேன்.
கோலியனூர் தாண்டி சென்ற போது திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதாக கூறினர்.
அங்கு சென்றதும் ஸ்டேஷன் அறையை மூடிக் கொண்டு மூன்று போலீசாரும் எனது துணிகளை அவிழ்த்து
நிர்வாணப் படுத்தி என்னிடம் திருட்டு பொருட்கள் குறித்து விசாரித்து சித்ரவதை செய்து ஆபாசமாக திட்டினர்.
அப்போது எனது கணவரைக் காட்டுங்கள் என்றதும் ஒரு போட்டோவை காட்டினர். அது என் கணவர் இல்லை.
எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகம் என கூறினேன். பின்னர் போலீசார் விநாயகத்திடம் விசாரித்த போது
அவரும் தனது மனைவி ஒல்லியாக இருப்பார் என கூறியதால் என்னை அன்று இரவு 11 மணிக்கு பண்ருட்டிக்கு அழைத்து வந்து விட்டனர்.
உடல் நிலை பாதிக்கப் பட்டதால் நேற்று முன்தினம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற சேர்ந்தேன். இவ்வாறு மல்லிகா கூறினார்.
இது குறித்து பண்ருட்டி இன்ஸ்பெக்டர் செல்வம், மல்லிகா விடம் விசாரித்து வருகிறார்.
Thanks for Your Comments