வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களில் பரவும் குழந்தைக் கடத்தல் கும்பல் வதந்தியை நம்ப வேண்டாம்.. சத்தமாக பிரச்சாரம் செய்ய நாள் ஒன்றுக்கு ரூ.500 கூலி பேசப்பட்டு நியமிக்கப் பட்டார் சுகாந்தா சக்ரபோர்த்தி.
ஆனால், கடந்த 28-ம் தேதி அந்தப் பணியைச் செய்யச் சென்ற அவரை ஒரு கும்பல் ஈவு இரக்கமின்றி அடித்துக் கொன்றது. வதந்தியின் விலை ஓர் உயிர்! சுகாந்தாவுக்கு 33 வயதுதன். மனைவியும் 5 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
சுகாந்தாவின் சகோதரர் தேபபத்ரா சக்ரபோர்த்தி இது படுகொலை என்கிறார். எங்களுக்கு யார் நியாயம் செய்வார்கள் என கதறுகிறார். நல்ல செய்தியைச் சொல்ல சென்றவரின் மரணச் செய்திதான் எங்களுக்குக் கிடைத்தது.
நாளொன்றுக்கு ரூ.500 சம்பளம் என்றால் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் என்பதால் தான் அவர் அந்த வேலைக்கே சென்றார் எனக் கதறுகிறார். சிறு வயதிலிருந்தே என் சகோதரர் அழகாகப் பாடுவார்.
அதே போல் ஏதாவது பொது மக்களுக்கான அறிவிப்பு என்றால் அதை நேர்த்தி யாகச் சொல்வார். அதனாலேயே அவரை இந்தப் பணிக்காக அதிகாரிகள் தேர்வு செய்தனர்.
ஆனால், இப்படி உயிரிழப்பார் என நாங்கள் நினைக்க வில்லை எனக் கூறும் தேபபத்ரா, "எங்களுக்கு நீதி வேண்டும். சுகாந்தாவின் 5 மாதக் குழந்தையின் முகத்தைப் பாருங்கள்.
தந்தையை அறியும் முன்னரே அவரை இழந்துள்ள குழந்தைக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்" என்றார் ஆவேசமாக.
கிட்னி திருட்டு!
கடந்த ஜூன் 26-ம் தேதி மோகன்பூர் பகுதியில் 11 வயது சிறுவன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப் பட்டது. அந்த சிறுவனை சிலர் சிறு நீரகத்துக்காக கொன்றதாக சமூக வலை தளங்களில் வதந்தி பரப்பப் பட்டது.
ஆனால், அதன் பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில் சிறுவனின் சிறுநீரகங்கள் எடுக்கப்பட வில்லை என உறுதி செய்யப் பட்டது.
இருந்தாலும் மேற்கு திரிபுரா மக்கள் மத்தியில் சிறுநீரகத் திருடர்கள் பற்றிய வதந்தி இன்னமும் உலா வருகிறது.
இதைக் கட்டுப்படுத்தவே சுகாந்தா நியமிக்கப் பட்டார். சுகாந்தா இறந்து விட்டார். வதந்தி இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது.
Thanks for Your Comments