காவிரி நீர் பிடிப்பு பகுதியான கொள்ளேகால், அஞ்செட்டி, நாட்றாம் பாளையம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 10,700 கனஅடியாக வந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 27,500 கன அடியாக அதிகரித்தது.
இதனால் ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு உருவானது. மூன்று மாதத்திற்கு முன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 82 நாட்களுக்கு அருவியில் குளிக்க தடை விதித்தனர்.
கடந்த 29-ந்தேதி தான் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நீர்வரத்து உயர்ந்ததால் மாவட்ட நிர்வாகம், மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதித்திருக்கிறது.
இதனால் ஆயுத பூஜை விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லு க்கு ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீட்டு திரும்பினர்.
இன்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருந்த போதிலும் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப் படவில்லை.
Thanks for Your Comments