அயோடின் சத்துக்கும் தைராய்டு சுரப்பிக்கும் என்ன தொடர்பு?

0
இச்சுரப்பி தைராக்சின் என்ற ஹார்மோனைச் சுரக்க அயோடின் சத்துத் தேவைப்படுகிறது. 
அயோடின் சத்து குறைந்தால் தைராக்சின் ஹார்மோன் சுரப்பு இருக்காது. இதனால் உடல் வளர்ச்சி தடை படுகிறது.

குழந்தை குள்ளமாக இருப்பதோடு அறிவுத் திறனும் குறைந்து விடுகிறது. மேலும் மாறு கண், காது கேளாமை, மந்தமான போக்கு ஆகியவை காணப் படுகின்றன. 
இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் "க்ரெடின் குழந்தைகள்' என்று அழைக்கப் படுகின்றன. அயோடின் சத்து பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. 

அயோடின் சத்தை உள்ளடக்கிய மண்ணில் வளரும் தாவரங்கள், அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகிய வற்றிலிருந்து மனிதனுக்கு அயோடின் சத்து கிடைக்கிறது.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது, கால இடைவெளி இல்லாமல் திரும்பத் திரும்பப் பயிரிடுவதால் 

மண் வளம் குன்றிப் போதல் போன்ற காரணங்களால் இயற்கையில் இருந்து அயோடின் சத்து முழுமையாகக் கிடைப்பது இல்லை.
அயோடின் சத்துக் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை வரும் என்பது பரவலாகச் சொல்லப்படும் விஷயம். 
ஆனால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இன்னும் பலர் உணர வில்லை.

அயோடின் சத்துக் குறைவால் புத்திக் கூர்மை இல்லாமல் மந்தப் போக்கு ஏற்படும். வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி இருக்காது. 

பெண்களுக்கு பூப்பெய்வது, கருத்தரிப்பது தள்ளிப் போதல், மாதவிலக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது பலர் அறியாத விஷயம்.

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக் கலைதல், குறைப் பிரசவம், எடை குறைந்த குழந்தை பிறத்தல், சிசு இறப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. 
அயோடின் பற்றாக்குறையை ஈடுகட்ட உணவில் நாள்தோறும் அயோடின் கலந்த தரமான உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நமது உடலுக்கு மைக்ரோ அளவிலேயே அயோடின் தேவைப் படுகிறது. தினமும் ஒரு தீக்குச்சி தலையளவு அயோடின் கிடைத்தால் போதுமானது. 

ஒரே முறையில் அயோடினைத் தூக்கி விழுங்கி விடுவதால் நன்மை கிடையாது. 

கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ச்சியாகக் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் அயோடின் சத்து சமையல் உப்பில் கலந்து தரப்படுகிறது.
வீட்டில் வளர்க்கும் அனைத்து கால்நடைகளுக்கும் அயோடின் உப்பு கலந்த தீவனம் தருவதால் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி அதிகரிப்பதோடு நோய்ப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings