கும்பகோணத்தில், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 4 இளைஞர்கள், சகிக்க முடியாத அந்த கொடுங்குற்றத்தை வீடியோ எடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கும்பகோணத்திற்கு தனியார் வங்கி ஒன்றில் வேலைக்கான பயிற்சியில் சேர்வதற்காக, சென்ற ராஜஸ்தான் இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் புகாரை முதலில் ஏற்க மறுத்த காவல் துறையினர் வங்கி அதிகாரிகளின் பரிந்துறையை ஏற்றுக் கொண்டு கடத்தல், பாலியல் வன்கொடுமை,
கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பைனான்சியர் மகன் தினேஷ், வசந்த், புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பதற வைக்கும் பாலியல் கொடுமையை நிகழ்த்திய தினேஷ் மற்றும் வசந்த் ஆகியோர், போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்று காயம் அடைந்தனர்.
புருஷோத்தமன், அன்பரசன் ஆகியோர் வருகிற 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
ஏற்றுக் கொள்ள முடியாத குற்றத்தை புரிந்திருக்கும் இந்த கயவர்களுக்காக, தமிழ்நாட்டின் எந்த வொரு பகுதியைச் சேர்ந்த
வழக்கறிஞரும் ஆஜராக கூடாது என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வங்கிக்கு செல்வதற்கு பதிலாக ஆட்டோ டிரைவர் திட்டமிட்டு கும்மிருட்டில், இறக்கி விட்டதோடு தினேசுக்கும்
தகவல் தெரிவித்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதால் அந்த ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
தினேசிடம் நடந்த விசாரணையில், இளம் பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய தினேஷ், அதனை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்ததாக கூறப்படுகின்றது.
தினேசின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்ட போது இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல் மேலும் பல பெண்களுடன் தினேஷ் தனிமையில் இருக்கும் வீடியோ காட்சிகளும் அதில் இருந்துள்ளது.
அந்த பெண்கள் தனது தந்தையிடம் கடன் பெற வந்தவர்கள் என்றும் வட்டி கட்டாதவர்களை மிரட்டியும், கடன் வேண்டி வருபவர்களின் கஷ்டத்தை பயன்படுத்தியும்
தனது இச்சையை தீர்த்துள்ளான் தினேஷ் என்றும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தான் அவை என்பதையும் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
20 க்கும் மேற்பட்ட பெண்களை கடன் தருவதாக சீரழித்து வீடியோ எடுத்த தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த
பைனான்சியர் சிவராஜ் போன்றே, தினேஷின் நடவடிக்கைகளும் இருந்துள்ளதாக, காவல்துறையினர் கூறுகின்றனர்.
பலாத்கார வழக்கில் சிக்கி உள்ள 4பேரின் பெற்றோர், ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அஞ்சியும்,
பொதுமக்களின் ஆத்திரத்திலிருந்து தப்பிக்கவும், வீடுகளை பூட்டிவிட்டு, தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த வழக்கில் தொடர்ந்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ராஜஸ்தான் இளம்பெண் பலாத்கார கும்பலிடம் சிக்குவதற்கு காரணமான, ஆட்டோ டிரைவர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.
அவர் பிடிபட்டால், இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வரலாம் என்று கூறப்படுகின்றது.
கோவில் நகரமான கும்பகோணத்தில், அண்மை காலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதற்கு, கட்டுப்படாற்ற கஞ்சா விற்பனையும் முக்கிய காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இரவு ரோந்து பணிகளை போலீசார் தீவிரப் படுத்துவதோடு, பொதுமக்களின் புகார்களை அலட்சியப் படுத்தாமல் விரைந்து விசாரிக்க வேண்டும் என்பதே கும்பகோணம் மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது
Thanks for Your Comments