சென்னை ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பணிபுரிந்து விலகியவரின், சான்றிதழை கல்லூரி நிர்வாகம் கொடுக்க மறுத்ததால்
விரிவுரையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொறியியலின் ஆரம்ப கட்ட படிப்பான பி.இ வரை மட்டுமே படித்த கார்த்திகேயன் என்பவரை சேர்மனாக கொண்ட ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரி சென்னை செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது.
இங்கு அண்ணாபல்கலை கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பிலும் மற்றும் விரிவுரையாளர் படிப்பிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தங்க பதக்கம் வென்ற வசந்த வாணன் என்பவர் பணிக்கு சேர்ந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ந்தேதி ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் விரிவுரையாளராக பணிக்கு சேர்ந்த போது,
அரசின் எம்.ஐ.டி கல்லூரியிலும் பணிக்காக விண்ணப்பித்து இருப்பதால் அங்கு பணிக்கிடைத்தால் வேலையில் இருந்து விலகிக் கொள்வேன் என்றும் முன் கூட்டியே தெரிவித்துள்ளார் வசந்தவாணன்.
அவர் எதிர் பார்த்த படியே ஆகஸ்ட் 30 ந்தேதி எம்.ஐ.டி யில் பணி கிடைத்துள்ளது.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் சென்று தனது அசல் கல்வி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்று ஆகியவற்றை கேட்டு முறையிட்டுள்ளார்.
ஆனால் அவர்களோ கல்வி சான்றிதழையும் சம்பளத்தையும் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
எம்.ஐ.டியில் கல்வி சான்றின் நகல்களை கொடுத்து தற்காலிக விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார் வசந்த வாணன்,
ஆனால் ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிர்வாகமோ கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் அவரது சான்றிதழை கொடுக்க மறுத்து வந்தது.
ஒரு கட்டத்தில் செல்போன் மூலமாக, கல்லூரி முதல்வர் குமாரசாமி என்பவரிடம் பேசிய போது அவர் சேர்மன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் சான்றிதழ் கிடைக்கும் என்பது போல மிரட்டியதாக கூறப்படுகின்றது
இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த வசந்த வாணன், நசரத் பேட்டை காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்கம் போல சி.எஸ்.ஆர் கூட பதியாமல் விசாரிக்க தகுந்த புகாராக கூட ஏற்றுக் கொள்ள வில்லை.
ஸ்ரீ சாஸ்தா கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து தன்னை இழிவுபடுத்தி வந்ததால் கடுமையான விரக்திக்கு சென்ற வசந்த வாணன் , தான் படித்த சான்றிதழ் இனி ஒரு போதும் தனக்கு கிடைக்க போவதில்லை என்ற முடிவால் கடும் மன அழுத்தத்திற்கு தள்ளப் பட்டுள்ளார்.
தன்னுடைய சாவுக்கு பின்னராவது கல்வி சான்றிதழ் கிடைத்தால் தனது சடலத்தில் வைத்து அடக்கம் செய்யுங்கள் என்று கதறிய படியே சகோதரருக்கு தகவல் தெரிவித்த வசந்த வாணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் ..!
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் காவல் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் வசந்த வாணின் கல்வி சான்றிதழை அவரது சகோதரரை வரவழைத்து கொடுத்து அனுப்பி உள்ளது ஸ்ரீ சாஸ்தா கல்லூரி நிர்வாகம்..!
இவரைப் போலவே கல்வி சான்றிதழை பெற இயலாமல் தவித்து வரும் விரிவுரையாளர்கள் பலர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீ சாஸ்தா கல்லூரியின் அராஜக போக்கு குறித்து புகார் அளித்துள்ளனர்.
ஏற்கனவே போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் பொறியியல் கல்லூரி களுக்கு மாணவர்கள் செல்வதில்லை, பெரும்பாலான கல்லூரிகளில் தரமான விரிவுரை யாளர்கள் கிடையாது
இந்த நிலையில் ஸ்ரீ சாஸ்தா கல்லூரி செய்த இந்த மனசாட்சியற்ற காரியம் அனைவரையும் கடும் அதிர்ச்சிக் குள்ளாகி உள்ளது.
தனியார் கல்லூரிகள் சான்றிதழை தரமறுத்து அராஜகத்தில் ஈடுபட்டால் அண்ணா பல்கலைக் கழகத்தில் புகார் அளிக்கலாம்.
அல்லது ஏ.ஐ.சி.டி.இ என்று அழைக்கப்படும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவிடம் புகார் அளிக்கலாம், இரண்டிலும் தீர்வு கிடைக்கா விட்டால் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணலாம்.
அதை விடுத்து உயிரை மாய்த்து கொள்வது என்பது அராஜக கல்லூரி களுக்கு அஞ்சி அடங்கி செல்வது போன்ற கோழைத்தனமானது.
இது போன்று விரிவுரை யாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
Thanks for Your Comments