சென்னை நுங்கம் பாக்கத்தில் சுவர் ஏறிக் குதித்த போது கம்பியில் மாட்டிக் கொண்ட நபரை சமயோஜிதமாக மீட்டு
உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புக் குழுவினருக்கு மருத்துவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் எனும் 29 வயதான கார் ஓட்டுநர் கடந்த 20ஆம் தேதி நள்ளிரவு தாம் பணிபுரியும் வீட்டிலிருந்து அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்லப் புறப்பட்டார்.
ஆனால், அன்று வெளிப்புறக் கதவுகள் பூட்டப்பட்டுவிட்டதால், சுவர் ஏறிக் குதிப்பதற்கு வெற்றிவேல் முயற்சித்துள்ளார்.
அப்போது மதில் சுவர் மீது இருந்த தடுப்புக் கம்பி அவரது முதுகில் குத்தியதால், அதில் தொங்கியபடி வெற்றிவேல் அலறினார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் எழும்பூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
ஆறே நிமிடங்களில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர் பழனியாண்டி தலைமையிலான 6 பேர் கொண்ட மீட்பு குழுவினர் தாங்கள் பெற்ற அவசர கால மீட்பு பயிற்சியைப் பயன்படுத்தி துரிதமாக செயல்பட்டனர்.
தீயணைப்பு வாகனத்தில் இருந்த ஹைட்ராலிக் கட்டரைக் கொண்டு வந்து பழனியாண்டி கம்பியை அதன் அடிப்பகுதியோடு வெட்டினார்.
அப்போது, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வெற்றிவேலை, தங்கராஜ், குமார், பரிநாமசுந்தர், வினோத், சுரேஷ்பாபு ஆகிய ஐந்து தீயணைப்புப் படை வீரரும் அசையாமல் தாங்கிப் பிடித்து மீட்டனர்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, முதுகில் கம்பி குத்திய நிலையிலேயே தலை குப்புறப் படுக்க வைக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட
வெற்றிவேலுக்கு இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் சிவராமன் தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது.
ஸ்கேன் செய்து பார்த்த போது நுரையீரலுக்கும், இதயத்துக்கும் நடுவே இரும்புக் கம்பி குத்திக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக தலைகுப்புறப் படுக்க வைத்த நிலையிலேயே கவனமாக அனஸ்தீஸ்யா எனும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, சிறப்பு உபகரணங்கள் மூலம் கம்பி வெற்றிகரமாக முதுகிலிருந்து அகற்றப்பட்டது.
நுரையீரல் லேசாக சேதமாகி யிருந்ததால் சிகிச்சை முடித்து வெற்றிவேல் வீடு இன்று திரும்பினார்.
இதுபோன்று உடலில் குத்திய பொருளை எடுக்கும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், கம்பியை பிடுங்க முயற்சித்தாலோ,
மீட்கப்பட்ட போது சற்று அசைத்திரு ந்தாலோ அது இதயம் அல்லது நுரையீரலை கிழித்து சேதப்படுத்தியிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்ளை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு அழைத்த
அதன் முதல்வர் ஜெயந்தி மற்றும் மருத்துவர் குழுவினர் சமயோஜிதமாக செயல்பட்டு உயிரைக் காத்ததற்கு பாராட்டு தெரிவித்தனர்.
உயிர்பிழைத்த வெற்றிவேலும், அவர்களுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தார்.
Thanks for Your Comments