சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வளையப் பந்தாட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு, அவரது சொந்த ஊரில் கிராம மக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள சிற்றிடையா நல்லூரைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் - சித்ரா தம்பதியினரின் மகள் தரணி (13). இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான வளையப்பந்து (ரிங்பால்) போட்டியில் பங்கேற்றார். இதில், சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிவரை முன்னேறிய தரணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இந்நிலையில், பதக்கத்துடன் நேற்று முன்தினம் மாணவி தரணி ஊர் திரும்பினார்.
அப்போது, அவருக்கு சிற்றிடையா நல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, உதவி தலைமை ஆசிரியர் சிவதாஸ் ஆகியோர் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர் அருள்,
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திலகர், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து, அலங்கார ஊர்தியில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வீடுகள் தோறும் மாணவி தரணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில், திருவிடை மருதூர், திருப்பனந்தாள் பகுதி பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பதக்கம் வென்ற மாணவி தரணி கூறியதாவது: எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், போட்டிகளில் பங்கேற்க முதலில் தயக்கமாக இருந்தது.
இருப்பினும் எனது பெற்றோர், உடற்கல்வி ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் எனக்கு தைரியம் தந்து தொடர்ந்து விளையாட வைத்தனர். இதனால் தான் தற்போது தேசிய அளவில் பதக்கம் வெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொடர்ந்து பயிற்சி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க விளை யாடுவேன். என்னைப் போல அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க முன்வரவேண்டும் என்றார்.
Thanks for Your Comments