துணி துவைக்கச் சென்ற மூன்று சிறுமிகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. விழுப்புரம் அடுத்த கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவரின் மகள் மணிமொழி (14). இவர் அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
அதே ஊரைச் சேர்ந்தவர் சண்முகம் என்பவரின் மகள் பவதாரணி (11) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். ஏழுமலை மகள் கவுசல்யா (12) ஏழாம் வகுப்பு படித்து வந்தார். தோழிகளான இவர்கள் மூன்று பேரும் நேற்று காலை 10 மணியளவில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் துணி துவைப்பதற்காகச் சென்றனர்.
அப்போது துணிகளை அலசுவதற் காகக் கிணற்றில் இறங்கிய பவதாரணி திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். தோழி உயிருக்குப் போராடுவதைப் பார்த்துப் பதறிய மணிமொழியும், கவுசல்யாவும் தங்களுக்கு நீச்சல் தெரியாது என்பதைக் கூட மறந்து பவதாரணியைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
அப்போது இவர்கள் இருவரும் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். துணி துவைக்கச் சென்ற மகள்களைக் காணாததால் சந்தேகமடைந்த அவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்த போது, 3 சிறுமிகளும் இறந்த நிலையில் கிணற்றில் மிதந்து கிடந்தனர்.
அதைப் பார்த்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கதறித் துடித்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் கெடார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் சிறுமிகள் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி 3 மாணவிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments