கடந்த ஆண்டு காணாமல் போன மாணவி எலும்புக் கூடாக மீட்கப் பட்டுள்ளார். இவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப் பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த புது வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மகள் சரிதா. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்ப வில்லை.
அவரின் பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சரிதா கிடைக்க வில்லை. இது குறித்து மாணவி சரிதாவின் அப்பா சுப்பிரமணி பொதட்டூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உறவினர்கள் சரிதாவை தொடர்ந்து தேடி வந்தனர். வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தேடுவதை நிறுத்தி விட்டனர்.
இந்நிலையில் நேற்று கீச்சளம் கிராமத்தில் சுரேஷ் என்ற விவசாயி கரும்புத் தோட்டத்து க்குச் செல்லும் வழியில் ஏரிக்கரை பகுதியில் பள்ளி சீருடையில் எலும்புக்கூடு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொதட்டூர் பேட்டை காவல் நிலையத்தில் விவசாயி சுரேஷ் புகார் தெரிவித்தார்.
அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னி நேரில் விசாரணை மேற்கொண்டார். எலும்புக் கூடாக இருந்தது மாயமான மாணவி சரிதா என்பது உறுதியானதை அடுத்து பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பி வைத்தார். இது குறித்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவி மாயமாகி தற்போது எலும்புக்கூடாகக் கிடைத்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி சரிதா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து புதைக்கப் பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் கருதுகின்றனர். சரிதாவை கொலை செய்தது யார் என்பது குறித்து தனிப்படைக் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for Your Comments