வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள பானி புயல் தற்போது அதி தீவிர புயலாக மாறி ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை மறுநாள் ஒடிசாவில் கரை கடக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
பானி புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. எனினும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற் கான வாய்ப்பு உள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
அதி தீவிர புயலாக மாறிய பானி புயல், சென்னையில் இருந்து 420 கிமீ தொலைவில் உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறது.
இந்த புயல் சின்னம் காரணமாக, சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பானி புயல் நாளை மறுநாள் ஒடிசாவின் பூரி அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. மே 4-ம் தேதிக்குப் பிறகு கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments