பள்ளியில் பெட்ரோல் குண்டு வீச்சால் விடைத்தாள்கள் எரிந்து நாசம் !

0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரியில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1,500 மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளிக்கு பூட்டு போடப் பட்டிருந்தது. நேற்று முன்தினம் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்தேகவுடு மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். 
பள்ளியில் பெட்ரோல் குண்டு வீச்சு


இரவு 7.30 மணி அளவில் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 

பின்பு அவர்கள் நீண்ட நேரம் போராடி தலைமை ஆசிரியரின் அறையில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்கள் (டி.சி.), தேர்வு விடைத்தாள்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு, கணினிகள், யு.பி.எஸ். மற்றும் ஏராளமான பொருட்கள் முழுமையாக எரிந்து நாசம் ஆனது. அறையின் 10 பீரோக்களின் இருந்த ஆவணங்கள் எரிந்து நாசமாயின.

இது பற்றி தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அதேபோல ஏராளமான மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் சான்றிதழ்கள் எரிந்து விட்டதோ? என்று ஒருவித பதற்றத்துடன் தேடினார்கள். 


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் தான் பள்ளியில் தீப்பிடித்தது தெரிய வந்தது. தீ விபத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை கட்டிட சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும், அறையில் உள்ள வெண்டிலேட்டர் உடைக்கப் பட்டு இருந்தது. மேலும் காலை 4 மணி அளவில் அந்த பகுதியில் மர்ம நபர்கள் சிலரின் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.

பள்ளியில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் யார்? எதற்காக பெட்ரோல் குண்டு வீசினர்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings