நாடாளு மன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இன்று 6வது கட்ட தேர்தல், 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது. இந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தின் கட்டல் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக பாரதி கோஷ் போட்டி யிடுகிறார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு ஒரு காலத்தில் நம்பிக்கைக் குரிய நபராக இருந்தவர். இவர் தனது ஏஜெண்டுடன் வாக்கு மையம் ஒன்றிற்கு இன்று காலை சென்றார். அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்பின் மற்றொரு வாக்கு மையத்திற்கு நுழைய முயன்ற அவர் மீண்டும் எதிர்ப்புக்கு ஆளானார். அடித்து தரையில் தள்ளப் பட்டார். இதனால் அவர் அங்கிருந்து அழுது கொண்டே சென்றார். மேற்கு வங்காளத்தில் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரசாரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அங்கு ஜக்ராம் நகரில் கோபிபல்லபூர் என்ற பகுதியில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் நேற்றிரவு இறந்து கிடந்துள்ளார். மர்ம மரணம் அடைந்த அவர் ராமன் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இந்நிலையில், 2 பா.ஜ.க. தொண்டர்கள் நேற்றிரவு துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர்.
கிழக்கு மேதினிப்பூர் பகுதியில் பகாபன்பூர் என்ற இடத்தில் சுடப்பட்டு கிடந்த அனந்த குச்சைட் மற்றும் ரஞ்சித் மைத்தி ஆகிய இருவரும் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். வாக்கு மையத்திற்குள் கோஷ் தனது மொபைல் போனுடன் உள்ளே சென்று வீடியோ ஒன்றை எடுக்க முற்பட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அறிக்கை அளிக்கும்படி தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது
Thanks for Your Comments