ரஷ்ய புரட்சியாளர் லெனின், ஒரு மேடையில் மாணவர்களிடையே உரை நிகழ்த்த வந்த போது மாணவர் களை நோக்கி, உங்கள் வாழ்கையில் மூன்று முக்கிய கடமைகளை முன்னிறுத்துகிறேன் என்றார்.
முதலாவது. 'மாணவர்களே படியுங்கள்', இரண்டாவது 'மாணவர்களே படியுங்கள்', மூன்றாவது 'மாணவர்களே படியுங்கள்' என்று கூறி விட்டு தன் உரையை முடித்துக் கொண்டார்.
இதனை விட யாரும் படிப்பின் மகத்துவத்தை உணர்த்தி விட முடியாது. ஆனால் இன்று பெரும்பாலான மாணவர்கள் பாட புத்தகங்களை தாண்டி தங்கள் வாசிப்பை விரிவு படுத்துவதில்லை.
பாடப்புத்தகம் படிப்பது போர் (bore) என்ற நிலையில் நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், டி.வி, போன்ற சந்தோஷத்தை போலவே பாடப்புத்தகத்தை தாண்டிய புத்தகத்தை வாசிப்பதும் பரவசம் தரும் ஒன்றே.
அமெரிக்காவில் ஓர் ஏழைச்சிறுவன், ஒரு பண்ணை முதலாளியிடம் புத்தகம் ஒன்றை இரவல் பெற்றான். படித்து முடித்த பின் அதை தனது வீட்டுக் கூரையில் வைக்க, மழையில் அது நனைந்து விட்டது.
அதனை உலர்த்தி பண்ணை முதலாளியிடம் கொடுக்க, அவர் அதனை வாங்க மறுத்து, அதற்கு பதிலாக அவர் வயலில் வேலை செய்யுமாறு பணித்தார்.
அதனை உலர்த்தி பண்ணை முதலாளியிடம் கொடுக்க, அவர் அதனை வாங்க மறுத்து, அதற்கு பதிலாக அவர் வயலில் வேலை செய்யுமாறு பணித்தார்.
அந்த சிறுவனும் அவரின் வயலில் வேலை பார்த்துக் கொண்டே ஓய்வு நேரங்களில் அந்த புத்தகத்தை திரும்ப திரும்ப படித்தான்.
அந்த சிறுவன் தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் ஏழ்மை விலங்கை அறுத்தெறிந்த அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அவர் படித்த அந்த புத்தகம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி 'வாஷிங்டனின் வாழ்க்கை வரலாறு'.
சர்வபள்ளி ராதா கிருஷ்ணன், துணை குடியரசு தலைவராக இருந்த போது வெளிநாட்டிற்கு பயணமொன்றை மேற்கொண்டார். அவருக்கான தங்கும் அறையில் இரண்டு படுக்கைகள் தயார் பண்ணச் சொன்னார்.
மனைவியை இழந்த ஒருவர், எதற்காக இரண்டு படுக்கையை தயார் பண்ண சொல்கிறார் என்ற சந்தேகத்தில் நோட்டமிட்ட அவரது உதவி யாளருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
ஒரு படுக்கையில் ராதா கிருஷ்ணன் அடுத்த கட்டிலில் முழுவதுமாக அடுக்கடுக்கான புத்தகங்கள். ராத கிருஷ்ணனோ சிரித்தபடி சொன்னார்.
புத்தகங்கள் தான் என்னுடைய மனைவி, எப்போதும் அவை தான் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் என்றார்.
பேரறிஞர் அண்ணா ஒரு முறை டெல்லி யிலிருந்து சென்னை திரும்பும் போது, விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து விடுகிறோம் என்றவர்களிடம், வேண்டாம் ரயில் டிக்கெட் பதிவு செய்யுங்கள் என்றாராம்.
ஐயா, ரயிலில் போனால் இரண்டு நாட்கள். பயணமும் வெகு சிரமமாக இருக்கும். அதனால் விமானத்திலேயே போய் விடலாமே? என்ற வர்களிடம், நீண்ட ரயில் பயணத்தில் நிறைய படிக்கலாம்.
நிறைய எழுதலாம் வெவ்வேறு மாநிலங்களின் வழியே பயணிப்பதால் என்னை அவர்களுக்கு யாரென்று தெரியாது.
அதனால் எந்த தொந்தரவும் இருக்காது என்றார். புத்தகத்தை அந்தளவு நேசித்தவர் அவர். ஆபிரஹாம் லிங்கனுக்கு புத்தகப் படிப்பில் கொள்ளை ஆசை.
அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, எப்பொழுதும் புத்தகமும் கையுமாக இருக்கும் அவரை மனைவிக்கு அறவே பிடிக்க வில்லை.
ஒருமுறை புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி எறிந்து விட்டு கத்திய அவரது மனைவி, இதை படிப்பதால் என்ன பிரயோஜனம்... பத்துகாசு சம்பாதிக்க இது பயன்படுமா? என சீறினார்.
லிங்கன் அமைதியாக, இதோ பார்... பத்துகாசு சம்பாதிக்க வழி என்னவென்று எனக்கே தெரியும். ஆனால் பத்துகாசு சம்பாதித்த பின் பண்போடு வாழ்வது எப்படி என்பதை இந்த புத்தகத்தின் மூலம் கற்றுக் கொள்கிறேன் என்று பதில் அளித்தார்.
ஒரே நாளில் பலமுறை நூலகம் செல்லும் பழக்கம் கொண்டவர் சுவாமி விவேகானந்தர். இதனைக் கண்ட நூலகர் சில கேள்விகளை எழுப்பினார். சுவாமி விவேகானந்தரோ, எந்த பக்கத்தில் என்ன உள்ளது என்பதுவரை கூறி ஆச்சர்யப் படுத்தினாராம்.
சேகுவேரா, கொரில்லா யுத்தத்தின் போது கூட, கிடைக்கும் இடைவேளை களில் புத்தகத்தை படித்துக் கொண்டே இருப்பாராம்.
நடுக்காட்டில் யுத்தத்தின் போதும் கூட தனது வீரர்களில் ஒருவனை அனுப்பி, வேண்டிய புத்தகங்களை வாங்கி வர சொல்லுவாராம்.
நடுக்காட்டில் யுத்தத்தின் போதும் கூட தனது வீரர்களில் ஒருவனை அனுப்பி, வேண்டிய புத்தகங்களை வாங்கி வர சொல்லுவாராம்.
ஜோகன் டிக்கின்ஸ் என்ற பிரஞ்சுக்காரர் 102 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புரோக்கன் தி ஹெல் (broken the hell) என்ற புத்தகத்தை தேடி, 12 ஆண்டுகளாக 16,000 கி.மீ க்கு மேலாக அலைந்து திரிந்திருக்கிறார்.
அந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் டிக்கின்ஸ் குடும்பம், உறவு, பணம், சந்தோசம் என வாழ்வின் ஒரு அத்தி யாயத்தையே தொலைத்திருந்தார்.
ஆனால் அந்த புத்தகத்தை கண்டுபிடித்த தருணத்தில் உலகையே வென்றவரைப் போல் ஆனந்தப்பட்டார்.
இந்த மகத்தான பிரதியை அச்சாக்கி, இனிவரும் தலைமுறை யினருக்கு கொடுத்து விட முடியும் என்பதை விட வேறென்ன சந்தோசம் இருந்திருக்கும் அவருக்கு வாழ்வில்?
சில புத்தகங்கள் நம்மை புரட்டி எடுக்கும். காரல் மார்க்ஸின் ஒரு புத்தகம் உலக வரலாற்றையே மாற்றி இருக்கிறது. திருவள்ளுவரின் திருக்குறள், மானுடப்பண்புகளை உலகெங்கிலும் விதைத் திருக்கிறது.
பகவத்கீதை திலகரையும், டால்ஸ்டாயின் ஒரு நூல் மகாத்மாவையும் உலகம் போற்றும் உன்னதத் தலைவர்க ளாக்கி இருக்கிறது.
ஒரு புத்தகமும், அதன் வாசிப்பும் நமக்கு ஆயிரம் ஆயிரம் கண்களையும் செவிகளையும் கொடுத்து, அறிவின் விசாலப்பாதையில், உலகின் ஏதோ ஒரு மூலைக்கு கொண்டு சென்று விடுகிறது.
மொட்டை மாடியின் குட்டிச்சுவரில் உட்கார்ந்து படித்து கொண்டிருக்கும் நம்மை, விக்கிரமாதித்யன் காலத்திற்கும், ஈழத்தின் போர்ச் சத்தங்களுக்கும் நடுவே தன் அம்மாவைத் தேடி அலையும் குழந்தையின் பரிதவிக்கும் மன நிலைக்கும் கொண்டு சென்று விடுகிறது.
நம்மால் போக முடியாத இடத்திற்கெல்லாம் புத்தகம், அதன் சாளரத்தின் வழியே கூட்டிப் போகும். நம் கைக்கு எட்டும் தூரத்தில் எவரெஸ்ட்டை கொண்டு வந்து நிறுத்தும் , காலுக்கடியில் கங்கையை ஓடவிடும்.
தேயிலைத் தோட்டங்களில், ஏகாபத்தியத்தின் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் எவனோ ஒருவனுக்காக நம்மை தேம்பி தேம்பி அழ வைக்கும்.
அடுத்தவர் மீதான அன்பையும், பாசத்தையும் கரிசனத்தையும், சகோதரத் துவத்தையும் விதைக்கும். வாசிப்பின் வாயிலாகவே சேகுவேராவு க்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் சலாம் போட வைக்கும்.
அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த போது, இங்கு எழுதப்பட்ட நூல்களை எடுத்து வரும்படி அந்நாட்டு அறிஞர்கள் கேட்டு கொண்டார்களாம்.
புத்தகங்களை உருவாக்காத தலைமுறை உலகை மேம்படுத்தாது. புத்தகங்களை வாசிக்க தொடங்கிய பின்பு தான் மைனராக இருந்த தலைமுறை மேஜரானது.
புத்தகம் புரட்சியை உண்டு பண்ணும். கோடான கோடி மனிதர்களின் இதயங்களில் பட்டாம் பூச்சிகளாக பறக்க விடும். புத்தகம் ஒரு நல்ல நண்பன். காதல் எப்போதும் கேட்க மட்டுமே செய்யும்.
நட்பும் புத்தகமும் தான் கொடுக்க மட்டுமே செய்யும். படிக்க நேரம் ஒதுக்குவோம். புத்தகத்திற்கு பணம் ஒதுக்குவோம். அப்போது தான் இந்த உலகம் நம்மை ஒதுக்காமல் இருக்கும்.