ஜூன் 3ம் தேதி 13 பேருடன் காணாமல்போன இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானத்தின் உடைந்த பாகங்கள், அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹத் பகுதியில் இருந்து விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்-32 என்ற விமானம் கடந்த ஜூன் 3ம் தேதி பகல் 12.27 மணிக்கு புறப்பட்டு சென்றது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேன்சுக்கா என்ற ராணுவ தளத்துக்கு சென்ற இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற 35 நிமிடத்துக்கு பின்னர் விமான கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தொடங்கப் பட்டது.
அப்போது, மாயமான இந்திய விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தின் டாடோ என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. எனினும், விமானத்தில் பயணித்த 13 பேர் நிலை என்ன என்று தெரிய வில்லை. இதையடுத்து, விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப் பட்டன. ஹெலிகாப்டர்களின் தேடுதல் பணியின் போது விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கி இருப்பது தெரிய வந்தது.
தொடர்பு துண்டிக் கப்பட்ட விமானம் இயந்திரக் கோளாறால் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. எனவே, சுகோய் 30 மற்றும் C-130J ஹெர்குலஸ் ரக விமானப்படை விமானங்கள் உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அதே போல், தரைப்பகுதியில் இந்திய ராணுவமும், இந்தோ-திபெத் எல்லைப் பகுதி போலீசாரும் தேடும் பணியில் ஈடுபட்டது.
மேலும் மோசமான வானிலை காரணமாக காணாமல் போன விமானத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த ஒருவாரக் காலமாக விமானப்படை விமானங்கள், ராணுவம், மலைவாழ் மக்கள் உதவியுடன் விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அருணாச்சல பிரதேசம் சியாங் மாவட்டத்தில் உள்ள கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில் விமானம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
Thanks for Your Comments