சீர்காழி அருகே இன்று பட்டபகலில் பஸ் டிரைவரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த இரண்டு ரவுடிகளின் பயங்கரம் கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பரவங்காடு கிராமம் கேசவன் நகரைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் நடராஜமணி. இவர் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பஸ் டிரைவாராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பரவங்காட்டில் உள்ள தன் வீட்டிற்கு நடராஜ மணியும் அவரின் தாயார் தனமும் வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு.அதே தெருவில் வசித்து வரும் பாலையா மகன் கார்த்தி என்பவர் குடி போதையில் வந்து கொண்டிருந்த போது வாசல் முன்பு நின்று கொண்டிருந்த நடராஜ மணியை பார்த்து ஏன் என்னை பார்த்து முறைக்கிறாய் என்று கேட்டு திட்டியதாக கூறப் படுகிறது.
அப்போது அருகில் நின்று கொண்டிருந்த தனத்தையும் திட்டினார். இதனால் கார்த்திக்கும் தனத்துக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த கார்த்தி தனத்தை தாக்கினார். இதில் உதட்டில் காயம் ஏற்பட்ட தனம் இரவு 10 மணி அளவில் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகார் சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று நடராஜமணி தனது வீட்டிலிருந்து கொள்ளிடம் ரயில் நிலையம் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கார்த்திக் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் நண்பர் ராமசாமி மகன் சத்யா ஆகிய இருவரும் சேர்ந்து பட்டப்பகலில் கிராம மக்கள் கண்ணெதிரில் வீச்சரிவாளுடன் விரட்டி வந்து நடராஜ மணியை சரமாரியாக வெட்டினர்.கீழே விழுந்த நடராஜ மணி தப்பிக்கும் முயற்சியில் எழுந்து ஓடினார்.
மீண்டும் ஓட ஓட விரட்டி நடராஜ மணியை வெட்டினர். அப்போது ரயில் நிலையம் எதிரே நடராஜ மணி மயங்கி ரத்த வெள்ளத்தில் விழுந்தார். உடன் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் நடராஜ மணியை ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. ஆனாலும் சில நிமிடங்களில் நடராஜ மணியின் உயிர் பிரிந்தது. உடனடியாக ஆம்புலன்ஸில் இருந்து உடல் கொள்ளிடம் ரயில் நிலையம் எதிரே இறக்கி வைக்கப் பட்டது.
இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த நாகை எஸ்.பி விஜயகுமார் சீர்காழி டி.எஸ்.பி வந்தனா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இது குறித்து எஸ்.பி. விஜயகுமார் பேசுகையில்" நடராஜ மணியை கொலை செய்த கொலையாளிகள் இருவர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
அவர்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். கொலையாளி கார்த்திக் என்பவர் மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்பு கொள்ளிடம் தோப்பு தெருவைச் சேர்ந்த சுமன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
கொள்ளிடம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் கார்த்திக் பெயர் இடம் பெற்றுள்ளது. கொலையான நடராஜ மணிக்கு வெண்ணிலா என்ற மனைவியும் மூன்றரை வயதில் கார்த்திகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. பட்டப்பகலிலேயே கொள்ளிடம் பகுதியில் நடந்த இந்த கொடுரக் கொலைச் சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி யுள்ளது.
Thanks for Your Comments