கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. முதலில் சரியான மழை பெய்யாத நிலை நிலவியது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாநிலம் முழுவதும் மழை தீவிரம் அடைந்து உள்ளது.
கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த மாவட்டங்களில் கனமழை நீடிக்கிறது. இதனால் இங்கு உள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
மேலும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக இந்த மாவட்டங்களில் ஏராளமான மரங்கள் சாலைகளில் சாய்ந்து கிடப்பதால் போக்கு வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2 நாட்களாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டு உள்ளதால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது.
கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் மீட்பு குழுவினர் மீட்புபணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கண்ணூர், காசர்கோடு மாவட்டங் களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது. அதேப் போல மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங் களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டு உள்ளது.
மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
மாநிலம் முழுவதும் உள்ள 26 முகாம்களில் 1,519 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
Thanks for Your Comments