"இதுக்கு தான் பணம் தந்தியா..ண்ணா" என்ற சாந்தியின் கேள்விக்கு இதுவரை யாராலும் பதில் சொல்லவே முடிய வில்லை. திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சின்ன காளிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் துரைராஜ் 70 வயது.
இவருக்கு சாந்தி, செல்வி என்று 2 மகள்களும் கோபால கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் செல்வி கணவனை இழந்தவர். அதனால் அப்பாவுடன் தான் தங்கி உள்ளார். கோபால கிருஷ்ணனுக்கு 37 வயதாகிறது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இதனால் குடும்பமே சோகத்தில் இருந்தது.
எதுக்கு பணம்?
இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென துரைராஜ், செல்வி, கோபால கிருஷ்ணன் ஆகியோர் சாந்தியின் வீட்டிற்கு சென்றார்கள். ரொம்ப நேரம் பாசமாக பேசிக் கொண்டிருந்தனர்.
கோபால கிருஷ்ணன், திடீரென தங்கை சாந்தியின் கையில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்தார். எதுக்குண்ணா பணம் தர்றே என்று சாந்தி காரணம் கேட்டார்.
பத்திரம்
அதற்கு கோபால கிருஷ்ணன், "உனக்கு ஏதாவது அவசர செலவு வரும்.. அப்போ இந்த பணம் தேவைப்படும்" என்று சொல்லி விட்டு கிளம்பினார். மேலும் கிளம்பும் போது, பத்திரத்தையும் கையில் தந்தார்.
"இது எதற்கு" என்று சாந்தி கேட்க, "நம்ம வீட்டில் வெச்சா பாதுகாப்பு இல்லை, உன்கிட்டியே இருக்கட்டும்" என்று சொல்லி விட்டு வீடு திரும்பினார்.
தற்கொலை
நேற்று காலை ரொம்ப நேரமாகியும் துரைராஜ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு போய் பார்த்துள்ளனர். அப்போது, அங்கு துரைராஜ், செல்வி, கோபால கிருஷ்ணன் 3 பேருமே தூக்கில் தொங்கிய நிலையில் காணப் பட்டனர்.
செல்விக்கு லேசான உயிர் இருந்து. துரைராஜ், கோபால கிருஷ்ணனுக்கு ஏற்கனவே உயிர் பிரிந்திருந்தது. செல்வியை ஆஸ்பத்திரி க்கு அழைத்து செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.
இறுதிசடங்கு
இந்த விஷயம் சாந்திக்கு தெரியப் படுத்தப்பட்டது. பதறியடித்து கொண்டு ஓடிவந்த சாந்தி அப்பா, அண்ணன், அக்கா 3 பேரின் சடலங்களை யும் பார்த்து கதறினார்.
தங்களுடைய மரணம்கூட யாருக்கும் சுமையாக இருந்து விடக்கூடாது என்று நினைத்து 3 பேருமே இறுதி செலவுக்காக பணத்தை சாந்தியிடம் தந்துவிட்டு வந்துள்ளது அப்போது தான் புரிந்தது.
சாந்தியின் கதறல்
கோபால கிருஷ்ணனிடம், "இதுக்குதான் பணம் தந்தியா அண்ணா" என்று கேட்டு கேட்டு சாந்தி அழுதது எல்லாரையும் கண் கலங்க செய்தது.
இறுதி சடங்குக்கு தேவையான தொகையை தந்து விட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லடம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Thanks for Your Comments