தமிழகத்தில் எத்தனையோ விவாதத்துக் குரிய விஷயங்கள் இருக்கும் நிலையில், குனித்து கும்பிட்டுப் பதவியைப் பெற்றவர்கள் யார் யார்? எத்தனை முறை? என்ற விவாதம் சட்டப் பேரவையில் இன்று காரசாரமாக நடைபெற்றது.
சட்ட பேரவையில் இன்று திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி பேசுகையில், மு.க. ஸ்டாலின் யாரிடமும் குனிந்து, கும்பிட்டு பதவியைப் பெறவில்லை. தமிழகத்தின் எதிர்கால தலைமை மு.க. ஸ்டாலின்தான் எனக் கூறினார்.
இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. செந்தில் பாலாஜியின் பேச்சுக்கு முதல்வர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். குனிந்து பதவியைப் பெற்றார்கள் என எங்களை தொடர்பு படுத்தி செந்தில் பாலாஜி பேசியது தவறு என்று முதல் எதிர்ப்பைப் பதிவு செய்தார் முதல்வர்.
இதற்கு, அதிமுக பிளவுபட்ட போது ஓ. பன்னீர் செல்வம் பேசியதை நான் இப்போது குறிப்பிட்டால் என்னவாகும்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதை யடுத்து, ஜெயலலிதா இருக்கும் போது அவரிடம் எத்தனை முறை குனிந்து கும்பிடு போட்டு செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை பெற்றார் என்பது எங்களுக்குத் தெரியும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் பேசிய முதல்வர் பழனிசாமி, கடந்த ஆண்டுகளில் செந்தில்பாலாஜி எத்தனை சின்னங்களில் போட்டியிட்டார் என்பதும், ஆரம்பத்தில் மதிமுக, பிறகு அதிமுக, பிறகு அமமுக, இன்று திமுக என பல கட்சிகளில் போட்டி யிட்டவர் தான் செந்தில் பாலாஜி.
ஆனால், ஓ. பன்னீர் செல்வம், அதிமுகவில் இருந்து பிரிந்த போதும், வேறு கட்சிகளில் செந்தில் பாலாஜியைப் போல சேரவில்லை. தனித்து நின்ற தர்மயுத்தம் நடத்தினார். மீண்டும் அதிமுகவில் இணைந்தார் என்று ஓபிஎஸ் ஸைப் பாராட்டிப் பேசினார். இவ்விதமாக, பேரவையில் இன்று மிக முக்கிய விவாதம் நடைபெற்றது
Thanks for Your Comments