கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு, நாளை கடைசி நாளாக அமையும் என முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித் துள்ளார். 'அண்ணாமலை' படத்தில் ரஜினி கூறும் வசனம் போல், அசோக், இந்த நாள குறிச்சு வச்சுக்கோ என, சவால் விடுத்துள்ளார் எடியூரப்பா.
ஆட்சிக்கு வந்து 13 மாதங்களே ஆகி இருக்கும் நிலையில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாள தள கூட்டணி அரசு கவிழும் நிலையில் ஊசலாடி வருகிறது.
காங்கிரசை சேர்ந்த 13 எம்எல்ஏ க்கள், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம்எல்ஏ க்கள் என 16 எம்எல்ஏ க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நாளை (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் இன்று செய்தி யாளர்களை சந்தித்த, எடியூரப்பா கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளின் சட்டசபை கொறடா பிறப்பித்த உத்தரவுக்கு அவர்கள் கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் யாருமே மதிப்பளிக்காத நிலையில் மெஜாரிட்டியை நிரூபிக்க தவணை வாங்கும் முயற்சிகளால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை என்றார்.
மேலும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் 'மும்பையில் தங்கியுள்ள 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று யாரும் எந்த சூழ்நிலையிலும் அவர்களை வற்புறுத்த கூடாது.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க தயார் என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, முதலமைச்சர் குமாரசாமி மற்றும் சபாநாயகர் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், நாளை தான் குமாரசாமி தலைமை யிலான அரசின் கடைசி நாளாக அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கர்நாடக அதிருப்தி சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சங்கர், நாகேஷ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் தாமதம் செய்து வருவதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளனர்.
நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரம், சட்டசபையில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வுள்ளதாக கூறப்படும் நிலையில், பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைப்பெற்றது.
Thanks for Your Comments