கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 பிஞ்சுகள் இறந்து இன்றுடன் 15 வருஷங்கள் ஆகின்றன. இதை யொட்டி பள்ளி முன்பு ஊரே திரண்டு வந்து இறந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.
தீயில் தன் குழந்தையை பறிகொடுத்த பெண் ஒருவர், உன் போட்டோ இதுல இல்லையேடா.. ஒரு போட்டோ கூட உன்னை எடுக்காம விட்டுட்டேனே.." என்று கதறி அழுதது அனைவரையும் கலங்க செய்து விட்டது.
கும்பகோணத்தில் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
15 வருஷம் நிறைந்து விட்டாலும், குழந்தைகள் அன்று அலறியதை நம்மால் இன்னும் மறக்க முடிய வில்லை. இந்த தீ விபத்தில் உயிரிழந்த குழந்தை களுக்கு வருஷா வருஷம் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
கோர்ட் தீர்ப்பு
மேலும் குழந்தைகள் புதைக்கப்பட்ட இடுகாட்டில், குழந்தை களுக்கு விருப்பமான உணவு வகைகளை குடும்பத்தினர் படைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றவாளி களுக்கு தண்டனை வழங்கப் பட்டதோடு, பாதிக்கப் பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனாலும், பிஞ்சுகளை பறி கொடுத்த குடும்பங்கள் இன்னமும் அந்த துயரில் இருந்து மீளவில்லை.
கண்ணீர்
இன்று 15-ம் வருட நினைவு தினத்தை யொட்டி கும்பகோணமே சோகத்தில் மூழ்கியது. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், குழந்தை களை இழந்த பெற்றோர் என எல்லாருமே பள்ளிக்கு திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி
பள்ளி வளாகத்தில் உயிரிழந்த குழந்தைகளின் போட்டோக்கள் வைக்கப் பட்டிருந்தன. அதன் முன்பு நின்ற பெற்றோர்கள் மெழுகு வர்த்தி ஏந்தி, மாலைகள் போட்டு, கண்ணீர் வடித்து புலம்பி கலங்கி நின்றார்கள். பள்ளி மாணவர்கள் பூக்களை அள்ளி வீசி அஞ்சலி செலுத்தினர்.
போட்டோ
தீயில் குழந்தையை பறிகொடுத்த ஒரு பெண் அங்கு வந்து நின்று, "உன் போட்டோ இதுல இல்லையேடா.. ஒரு போட்டோ கூட உன்னை எடுத்து வெச்சுக்காம போயிட்டேனே" என்று கதறி அழுதது அனைவரின் இதயத்தையும் வெடிக்க செய்தது.
கோரிக்கை
இதை யடுத்து பேசிய பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், "இந்த நாளை பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அரசு அறிவிக்க வேண்டும். உள்ளூர் விடுமுறையும் அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். இன்னொரு கும்பகோணம், இந்த உலகத்துல எந்த மூலையிலயும் நடக்கக் கூடாது.. அதுக்கு அரசு தேவையான நடவடிக்கை களை எடுக்கணும்" என்றனர்.
Thanks for Your Comments